×

புழல் சுற்று வட்டார பகுதிகளில் உடைந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்

புழல்: புழல் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். புழல் கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கதிர்வேடு எம்ஜிஆர் நகர், லட்சுமிபுரம், ரெட்டை ஏரி, கல்பாளையம், விநாயகபுரம், சோழவரம், ஆத்தூர், காரனோடை, அத்திப்பட்டு, பஞ்சட்டி, பாடியநல்லூர், நல்லூர், அலமாதி, எடப்பாளையம், அருமந்தை, பெருங்காவூர், விளாங்காடு பாக்கம், வடகரை, கிராண்ட் லைன், செங்குன்றம் தண்டல் கழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் சிதிலமடைந்துள்ளதால், சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்த கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், பலத்த காற்று வீசும் நேரங்களில் இந்த மின் கம்பங்கள் உடைந்து விழும் நிலை உள்ளது.

மேலும், பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குவதால், அவ்வழியாக லாரி, வேன், டிராக்டர் உள்ளிட்ட வகனங்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி அவ்வப்போது காற்றில் இந்த மின கம்பிகள் உரசி, தீப்பொறி ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களுக்கு புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். மேலும், புதிய மின் கம்பங்கள் இருப்பு இல்லை. உயர் அதிகாரிகளிடம் புதிய மின் கம்பங்கள் கேட்டு பலமுறை மனு செய்தும் இதுவரை அனுப்பாமல் உள்ளனர், என அவர்கள் பொதுமக்களிடம் கூறி வருகின்றனர். ஆனால் கதிர்வேடு அடுத்த விநாயகபுரம் சுடுகாட்டின் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட புதிய மின் கம்பங்கள் வீணாக தரையில் போடப்பட்டுள்ளது. அவற்றை எடுத்து பயன்படுத்தலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுகின்றனர். எனவே, மழைக்காலம் தொடங்கும் முன், மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collapse ,state , Power poles ,state , collapse
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...