×

நோயாளி இறப்புக்கு காரணமான டாக்டருக்கு 1 லட்சம் அபராதம் : நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது தாய் நாகம்மாளுக்கு கடந்த 2013ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், விஜயகுமார் தனது தாயாரை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர், நாகம்மாளை பரிசோதனைக்காக மருத்துவமனையின் 2ம் தளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, நாகம்மாள் தடுமாறி கீழே விழுந்ததில், அவரது குதிகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி விஜயகுமாரிடம் மருத்துவர் தெரிவிக்கவில்லை. மேலும், கால் முறிவுக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். ஆனால், நாகம்மாள் வலியால் அலறி துடித்தார். இதுபற்றி விஜயகுமார், தனது தாயாரிடம் கேட்டபோது, தவறி விழுந்ததாக கூறினார்.  உடனே, மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கால் முறிவு ஏதுமில்லை. சரியாகிவிடும் என்று கூறி நாகம்மாளை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த நாகம்மாள் பல மாதங்களாக நடக்க முடியாமல் படுக்கையிலையே இருந்துள்ளார்.

இதையடுத்து, வேறு மருத்துவமனையில் நாகம்மாளை பரிசோதனை செய்தபோது, கால் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதற்காக சிக்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், படுக்கையிலயே இருந்த நாகம்மாள், சில மாதங்களில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தனது தாயின் இறப்புக்கு காரணமான மருத்துவரிடம் இருந்து உரிய இழப்பீடு கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் விஜயகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமிகாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் தாயார் வேறு சிக்சைக்கு வந்தபோது, மருத்துவரின் கவனக்குறைவால் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமான சிகிச்சையை விட, மருத்துவரால் ஏற்பட்ட கால் முறிவால் பல மடங்கு செலவாகியுள்ளது. நாகம்மாள் இறப்புக்கு மருத்துவர் தான் முழு காரணம் என்று தெரியவந்துள்ளது. எனவே பதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு, சம்மந்தப்பட்ட மருத்துவர் 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

Tags : Doctor ,patient ,death , Patient's death ,1 lakh fine for doctor,court order
× RELATED பூசணி விதையின் பயன்கள்!