×

வாக்காளர் பட்டியல் குளறுபடி நீக்க நடவடிக்கை ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் பட்டியலில் உள்ள திருத்தங்களை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.நாடு முழுவதும் பொதுமக்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் அதிகளவில் தவறுகள் உள்ளதாகவும், அதில் உள்ள படங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், வாக்களிக்க சென்றால் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையை 100 சதவீதம் சரி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.அதன்படி, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரம் வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்களை சரி செய்ய புதிய மொபைல் ஆப் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் ஆப் மூலம், வாக்காளர்கள் தங்களிடம் உள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் பதிவாகி இருக்கும் பிறந்த தேதி, பெயர், உறவு முறை, புகைப்படம், பாலினம் ஆகியவை வாக்காளர் பட்டியலில் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருந்தால், அதாவது பெயரில் எழுத்து பிழை, வயதில் தவறு, பாலினத்தில் தவறு இருந்தால் வாக்காளர்கள் தங்களிடம் உள்ள  செல்போனில், NVSP இணையதளத்தில் இருந்து `ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன்’’ என்ற  செயலியை பதிவிறக்கம் செய்து தாங்களே திருத்தம் செய்யும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படி மொபைல் ஆப் மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். அப்படி திருத்தம் செய்ய வரும்போது, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஒரிஜினல் ஆவணங்களை அவர்களிடம் காட்ட வேண்டும். பின்னர் வாக்காளர் கூறிய தவறுகள் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்த திட்டத்துக்கு முதலில் போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து இதற்கான காலக்கெடுவை அக்டோபர் 15ம் தேதி நீட்டிக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக வருகிற நவம்பர் 18ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று நிருபர்களிடம்கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.64 ேகாடி பேர், தங்கள் பெயர், விலாசம், போட்டோ உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தாலுகா அலுவலகம் சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்துள்ளனர். இருந்தாலும், இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 30ம் தேதி வரை என்பதை, அக்டோபர் 15ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்தது. இப்போது, நவம்பர் 18ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுவரை வாக்காளர்கள், தங்கள் பெயர்கள் சரி செய்வது, திருத்தம் செய்ய வாக்காளர்கள் 1,950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், NVSP என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று மேற்கொள்ளலாம். இதையடுத்து நவம்பர் 25ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 01.01.2020 தேதியினை தகுதியாக கொண்டு பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும்.

வாக்காளர் சரிபார்ப்பு திட்ட பணிகள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலை கண்காணிக்க 3 அல்லது 4 மாவட்டத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ற விகிதத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள சி.சமயமூர்த்தி, ஜோதி  நிர்மலாசாமி, எம்.விஜயகுமார், எஸ்.சிவசண்முகராஜா, டி.பி.ராஜேஷ்,  வி.சம்பத், எம்.கருணாகரன், எஸ்.நடராஜன், ஷன்ஜன்சிங் ஆர்.சவான்,  ஏ.ஞானசேகரன் ஆகியோர் நேரில் போய், சரிபார்ப்பு மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை கண்காணிப்பார்கள். இவர்கள், சுருக்க முறை திருத்த பணிகளை  அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தது மூன்று முறையாவது  பயணம் மேற்கொண்டு மேற்பார்வையிடுவார்கள். மாவட்டங்களில் உள்ள சில  வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களை சந்தித்து வாக்காளர் பட்டியல்  சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வார்கள்.  ஆய்வு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்புவார்கள்.வருகிற நவம்பர் 18ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, போட்டோ, சரியாக இருக்கிறதா என்பதை வாக்காளர்களே இணையதளம், செல்போன் மூலம் சரி பார்க்கலாம். அப்போது அவர்களது செல்போன் நம்பரும் பதிவு செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தால், அவர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்கும் திட்டம் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருக்கிறது. இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தெளிவான பட்டியல் ரெடி
இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தின்படி, வாக்காளர் அடையாள அட்டையை 100 சதவீதம் திருத்தம் இல்லாமல் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags : IAS officers ,Chief Election Officer ,Persons , Action , remove, voter list , Chief Election Officer
× RELATED வருவாய் நிர்வாக ஆணையர், போக்குவரத்து...