×

750 ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்: வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடிப்பு

நாகை: நாகை கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வந்து சேராததால் நேரடி விதைப்பு, நாற்றங்கால் பதித்த 750 ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடாததாலும் முப்போகம் சாகுபடி நடைபெறவில்லை.ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடிமராமத்து பணி, தூர்வாரும் பணி என்று பல்வேறு தடைகளை தாண்டி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் வந்தது. இதையொட்டி நாகை விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரத்தூர், கீழ்வேளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் அப்பகுதிகளில் வயல்கள் வறண்டு பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. இதனால் சம்பா பயிர்கள் கருகி வருகிறது. ஒரு சில இடங்களில் நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் கருகும் அபாய நிலையில் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நாகை மோகனூர் கூழவாய்க்கால், நடுவாய்க்கால், தெற்கு வாய்க்கால் உள்ளிட்டவைகள், தூர்வாரப்படாததாலும், மேடான பகுதி என்பதாலும் சீராக தண்ணீர் வயல்களுக்கு வந்து சேரவில்லை. இதனால் பல லட்சம் செலவு செய்து 750 ஏக்கரில் நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது. ஒரு சில வயல்களுக்கு தண்ணீரே வந்து சேரவில்லை. இதனால் வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடித்து உள்ளது. எனவே அனைத்து வயல்களுக்கும் தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Samba ,Explosion , Samba crop, danger, eruption
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை