×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை வழக்கில் நாளை உத்தரவு: டெல்லி சிறப்பு நீதிமன்றம்

டெல்லி: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நிறைவடைந்ததையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 5-ம் தேதி, ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல், வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டது.

இந்த நிலையில், ஐ.என்.எக்‍ஸ். மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்ய உத்தரவு கோரி அமலாக்‍கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக ப.சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜர்படுத்த, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ப.சிதம்பரம் தரப்பி கபில்சிபல் வாதாடினார்; அப்போது அவர்; சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு அளித்திருந்தது.

இந்நிலையில் ஒரே வழக்கில் ஒரே சம்பவத்திற்கு இருமுறை கைது தேவை இல்லை என உச்சநீதிமன்ற தரப்பு உள்ளது. மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் முடியாது; காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவும் முடியாது. மேலும் விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக ஒரு நபரை ஆஜர்படுத்த சட்டத்தில் இடம் இல்லை என கூறினார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு வழங்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நாளைய தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : INX Media ,Enforcement department ,Chidambaram , INX Media, PC Chidambaram, Enforcement Department, Delhi Special Court
× RELATED புதுக்கோட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்!!!