×

மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் லட்டு வழங்குதில் திடீர் சிக்கல்: ராட்சத அடுப்புக்கு தீயணைப்பு துறை அனுமதி மறுப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ராட்சத அடுப்பு வைத்து லட்டு தயாரிக்க தீயணைப்பு துறை அனுமதி மறுத்து வருவதால் தீபாவளி முதல் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது. உலக புகழ் மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிகள் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4.30 மணி திறந்து இரவு 8.30 வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலில் ஒன்றரை ஆண்டுக்கு முன் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு கிழக்கு கோபுர மூடி வைக்கப்பட்டுள்ளது. நான்கு கோபுர வாசல் வழியாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி தீபாவளி முதல் லட்டு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டு தயாரிக்க கோயிலுக்குள் அமைந்துள்ள மடப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதற்காக அங்கு ராட்சத அடுப்பு வைக்க வேண்டி உள்ளது. இதற்கு தீயணைப்பு துறையின் “ஆட்சேபனை இல்லா சான்றிதழ்”  தேவை. இதனை அளிக்கும்படி கோயில் நிர்வாகம் சார்பில் கோரியுள்ள நிலையில் இதுவரை சான்றிதழை தீயணைப்பு துறையினர் வழங்கவில்லை என தெரிகிறது.

ஏனென்றால், 2018 பிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவு மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகையே உலுக்கியது. அந்த தீ எப்படி பிடித்தது என்பது இதுவரை கண்டறியப்படாமல் மர்மம் நீடிக்கிறது. இந்த தீ விபத்துக்கு முன் தற்போது லட்டு தயாரிக்க திட்டமிட்டுள்ள மடப்பள்ளியிலும் சிலிண்டர் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இரு தீ விபத்துக்கு பின் பாதுகாப்பு கருதி கோயிலுக்குள் அடுப்பு பயன்படுத்த தீயணைப்பு துறையின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தீயணைப்பு துறை அனுமதி வழங்க தயங்குவதால் இழுபறி நீடிக்கிறது.

இதற்கிடையே இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில துணை தலைவர் சுந்தரவடிவேலு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “கோயிலில் லட்டு வழங்கும் திட்டத்தை அரசும் கோயில் நிர்வாகமும் கைவிட வேண்டும். 10 ஆண்டுக்கு முன் குங்கும பிரசாதம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, இதுவரை முழுமையாக அமலாக்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் குங்கும பிரசாதத்தை தான் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். யாரும் லட்டு கேட்கவில்லை. கோயிலில் ஒன்றரை ஆண்டுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் இடிந்த வீரவசந்தராயர் மண்டபம், மேற்கூரை, தூண்கள் இதுவரை சீரமைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.

எனவே கோயிலுக்குள் மீண்டும் காஸ் சிலிண்டர் ராட்சத அடுப்புகளை பயன்படுத்த திட்டமிடுவது விபரீதமானது” என்றார். தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இந்த நிலையில் லட்டு தயாரிப்பதில் சிக்கல் நீக்கப்பட்டு, திட்டமிட்டபடி தீபாவளி முதல் லட்டு வழங்கப்படுமா? அல்லது நிறுத்தப்படுமா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Tags : Diwali ,Meenakshi Amman Temple: Fire Department ,Meenakshi Amman Temple , Meenakshi Amman Temple, Diwali, Latu, Problem
× RELATED மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு!