×

விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக இல்லை': ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் வாதம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நிறைவடைந்ததையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 5-ம் தேதி, ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல், வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டது. இந்த நிலையில், ஐ.என்.எக்‍ஸ். மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்ய உத்தரவு கோரி அமலாக்‍கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக ப.சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜர்படுத்த, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும், அவரது தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடி வருகிறார்.  

கபில் சிபில் வாதம்:

அவர் கூறியதாவது: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு அளித்திருந்தது. இந்நிலையில் ஒரே வழக்கில் ஒரே சம்பவத்திற்கு இருமுறை கைது தேவை இல்லை என உச்சநீதிமன்ற தரப்பு உள்ளது. மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் முடியாது; காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவும் முடியாது என கபில் சிபல் வாதம் செய்து வருகிறார். மேலும் விசாரணைக்காக மட்டுமே ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும், கைதுக்காக ஒரு நபரை ஆஜர்படுத்த சட்டத்தில் இடம் இல்லை எனவும் வாதம் செய்து வருகிறார்.  

இதனிடையே, ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஜாமின் குறித்து வழங்கிய தீர்ப்பில், ப.சிதம்பரம் வெளிநாடு தப்பி சென்று விடுவார் என்பதையும், ஆதாரங்களை அழித்து விடுவார் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சாட்சியங்களிடம் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு அவரிடம் அதிகாரம் உள்ளது என கூறி ஜாமின் மனுவை நிராகரித்தனர். இதனை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இன்றைக்குள், ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சிபிஐ தரப்பில் கிராஸ் அப்பீல் என்ற மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜாமின் கோரி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றது எப்படி? என விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Tags : PC Chidambaram ,Kapil Sibil ,trial , PC Chidambaram, Kapil Sibyl, INX Media, Case, Kapil Sibyl Argument
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை