×

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு : சீமான் மீது தேசத் துரோக வழக்கு பதிய வலியுறுத்தி தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் மனு

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் மீது தேசத் துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் சீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கே.எஸ். அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சீமான் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய கோரி தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து சீமான் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் வகையிலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Rajiv Gandhi ,murder ,assassination ,Congress , Prime Minister, Rajiv Gandhi, Assassination, Congress, Treason, KS Alagiri
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...