×

சாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் அஞ்சலி செலுத்தி 5 மரக்கன்றுகள் நட்ட மக்கள்: குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி

குடியாத்தம்: சாலையோரம் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டிதள்ளினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் 5 மரக்கன்றுகளையும் நட்டனர். மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டு வருவால் இயற்கையின் பாதிப்பு இப்போதே உணர முடிகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு குறைவு போன்ற இயற்கை பாதிப்புகளால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஆர்வம் ஒருசிலரிடம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் சாலை விரிவாக்கத்திற்காக அரசே மரங்களை வெட்டுவது வேதனை தருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராம சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஒரு மரம் நன்றாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த மரத்தை மர்ம நபர்கள் யாரோ அடியோடு வெட்டி சாய்துள்ளனர். நேற்று இதை பார்த்த பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சியுடன் வேதனை அடைந்தனர். அவர்கள் ஒன்றிணைந்து வெட்டப்பட்ட மரத்திற்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் வைத்தனர். மரம் வெட்டிய மர்ம நபர்களை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையறிந்த  குடியாத்தம் டவுன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து வெட்டப்பட்ட மரத்தின் நினைவாக அதன் அருகிலேயே இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 5 மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டு தண்ணீர் ஊற்றினர். இனி மரங்களை யாரும் வெட்ட விடமாட்டோம். இந்த மரக்கன்றுகளை பாதுகாப்பதுடன், மேலும் பல மரக்கன்றுகள் நடப்படும் என்று பொதுமக்கள் அப்போது தெரிவித்தனர்.


Tags : Tree, tribute, settlement
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிகள் கவுரவிப்பு