×

ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விநிதி கையாடல் தொடர்பான வழக்கு: ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி நிதி கையாடல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ அக்டோபர் 21ல் உரிய ஆவணங்களுடன் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த உதவி தொகைகளை பல்வேறு துறை அதிகாரிகள் சுரண்டுவதாக கூறி நாகபட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கையாடல் குறித்து அரசுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகு அளிக்கப்பட்ட புகார் மனு மீது தணிக்கை குழுவை அமைத்து விசாரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

தணிக்கை குழுவின் அறிக்கையின்படி சுமார் 17 கொடியே 36 லட்சம் ரூபாய் அளவிற்கு கையாடல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, லஞ்சஒழிப்புத்துறைக்கு அளித்த புகார் ஆதிதிராவிடர் நலத்துறைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அதன்மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் உதவுவதற்காக உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 21ம் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை  அக்டோபர்  21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : SC Welfare ,student ,SC , Adityravidar, Education Fund, Manipulation, Complaint, Chennai High Court, Secretary
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...