×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிசம்பருக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் : உயர்நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி

மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிசம்பருக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட நீதிபதிகள்,இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல்  செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டனர். இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10-க்கு ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

வழக்கின் பின்னணி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.

 சிபிஐ தரப்பில் அவகாசம் கோரி மனு

இந்த வழக்கில் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்,  நீதிபதிகள் சிவஞ்ஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை முடித்து இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த அன்று, அனுமதியின்றி கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? என விசாரிக்க வேண்டும். போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இதற்காக கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” என கூறப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை?

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், சிபிஐ விசாரணை தொடர்பாக கேள்வி எழுப்பியது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை? என கேட்ட நீதிமன்றம், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் சிவஞ்ஞானம், தாரணி அமர்வு தான் விசாரித்தது. எனவே அதே அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று  கூறி உத்தரவிட்டனர். மேலும் அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Tags : CBI ,Tuticorin ,shooting incident , Thoothukudi, Gunfire, Criminal Investigation, CBI, Judges
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...