×

72 நாட்களுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடக்கம் : இணைய சேவை தொடர்ந்து நிறுத்தி வைப்பு

ஸ்ரீநகர் : 72 நாட்களுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து அறிவிப்பை வெளியிட்டது.  இதையொட்டி பாதுகாப்பு கருதி அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கையாக இம்மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 மேலும், சில பிரிவினைவாதிகள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.தகவல் தொடர்பை தீவிரவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. 144 மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தற்போது, சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில், மெல்ல மெல்ல பதற்றம் தணிந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் 72 நாட்களுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக போஸ்ட் பேய்டு இணைப்பு உள்ள 40 லட்சம் பேர் செல்போன் சேவையை மீண்டும் பயன்படுத்த தொடங்கி உள்ளன. நண்பகல் 12 மணி முதல், போஸ்ட்பெய்ட் சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

சனிக்கிழமை அன்றே போஸ்பெய்ட் சேவை மீட்டமைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தால் இன்றைக்கு தள்ளிப் போடப்பட்டது. அதே நேரம் இணைய சேவையையும் ப்ரீபேயடு செல்போன் சேவையையும் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் செல்போனில் மட்டும் இணைய சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Tags : launch ,Jammu ,Kashmir , Cell Phone, Service, Jammu - Kashmir, Special, Status, Pospeed
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...