நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் : மேலும் 3 கல்லூரிகளின் குழுவினரை விசாரிக்க திட்டம்

தேனி : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக மருத்துவ கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தேனி நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. முன்னதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சத்திய சாய் மருத்துவமனை கல்லூரி உள்ளிட்ட 3 கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த குழுக்களிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

சான்றிதழ் சரிபார்க்கும் குழுவிடம் விசாரணை

தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த வழக்கில் 4 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் 5 பேர் உட்பட இதுவரை 10 கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முந்தைய விசாரணையின் போது நீதிபதி பன்னீர்செல்வம், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக கல்லூரிகளில் சான்றிதழ்களை சரிபார்க்கும் குழுவிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினீர்களா என சிபிசிஐடி போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இவ்வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து, வழக்கு தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றிய ‘ஜெனரல் டைரி’ எனப்படும் பொது குறிப்பேட்டையும் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.அப்போது சிபிசிஐடி போலீஸ் தரப்பில், சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி 14ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்நிலையில் வழக்கு தொடர்பான விவரங்களை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தேவி தேனி நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2வது நாளாக தருமபுரி மருத்துவக்கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சவீதா மருத்துவ கல்லூரி மாணவி பிரியங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, மருத்துவ கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவை ஏன் விசாரிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சிபிசிஐடி போலீசார் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>