×

எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவை வாபஸ் பெறுவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்க : தமிழிசைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வழக்கு வாபஸ் குறித்து 10 நாட்களுக்குள் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை தரப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை மனு


நாட்டின் 17 வது மக்களவை தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவை ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கை வாபஸ் பெறுவதாக வேறொரு மனு


அதில், கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அத்துடன் முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாக  தமிழிசை தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி அவர் உயர் நீதிமன்றத்தில் வேறொரு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தான் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ளதால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு முந்தைய விசாரணையில், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் 10 நாட்களுக்குள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்


இந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : withdrawal ,Kanimozhi , Kanimozhi, discount, Tuticorin, election, Tamilisai, withdrawal, Advertising, High Court
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...