பொள்ளாச்சி-கோவை இடையே நாளை முதல் நிரந்தர ரயில் சேவை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் ஆண்டு விழாவையொட்டி, பொள்ளாச்சி-கோவையிடையே நாளை முதல் நிரந்தர ரயில் சேவை துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான பொள்ளாச்சி விளங்குகிறது. பொள்ளாச்சிக்கு ரயில் சேவையானது, கடந்த 1915ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி துவங்கப்பட்டது. அப்போது மீட்டர்கேஜ் பாதை ஏற்படுத்தப்பட்டது. முதலில் கோவை போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை ரயில் சேவை இருந்தது. அதன்பின் 1928ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும், 1932ம் ஆண்டு பொள்ளாச்சியிலிருந்து பாலக்காட்டிற்கும் ரயில் சேவை அடுத்தடுத்து துவங்கப்பட்டது.

பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, கோவை, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ரயில் சேவை இருந்தது. இதனால் ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. மேலும் இங்கிருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில் இயக்கப்பட்டிருந்தது. மேலும் அப்போது, ரயில் இணைப்பு பெட்டிகளை பழுது பார்ப்பதற்கான பணிமனையும், ரயில் பெட்டிகளை தூக்கி நிறுத்துவதற்கான ராட்சத கிரேன் சுமார் 80 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல்-போத்தனூர் அகல ரயில்பாதை திட்டம் கடந்த 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அப்போது மீட்டர்கேஜ் இருப்பு பாதையை மாற்றி, அகல ரயில்பாதை பணிக்காக 2008ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியுடன் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. 2009ம் ஆண்டு முதல் திண்டுக்கல் போத்தனூர் வரையிலான அகலரயில் பாதைக்கான பணி ஆரம்பிக்கப்பட்டது. இப்பணி 8 ஆண்டுகளில் முழுமையாக நிறைவுபெற்று, பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு, கோவை, மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்சேவை தற்போது தொடர்ந்துள்ளது. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் உருவாகி நாளை (15ம் தேதியுடன்) 104ம்  ஆண்டாகிறது. இதையொட்டி அன்று, தென்னக ரயில்வேதுறை சார்பில் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்டுவிழா கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி முதல் பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு இடையே காலை மற்றும் மாலை நேரத்தில், சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில் சேவையானது. ரயில் பயணிகள் பொது நல சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் விடுத்த கோரிக்கையின்படி, ரயில்வே ஸ்டேஷன் ஆண்டு விழாவான நாளை முதல் நிரந்தர சேவையாக துவங்கப்படுகிறது. அதுபோல், பழனியிலிருந்து தினமும் காலை 10.45மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மதியம் 2.15மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலும். கோவையில் மதியம் 1.45மணிக்கு புறப்பட்டு பழனிக்கு மாலை 4.40மணிக்கு சென்று சேரும் சிறப்பு ரயிலானது, நிரந்தர ரயில் சேவையாக மாற்றப்படுகிறது. அதனை டெல்லியிலிருந்து, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் காணொலி மூலம் துவக்கி வைக்கிறார் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi ,Coimbatore Pollachi ,Railways ,Coimbatore , Pollachi, Coimbatore, Railways
× RELATED தாவரவியல் பூங்காவில் ஓராண்டுக்கு...