தேனியில் தனியார் மசாலா தொழிற்சாலையில் தீவிபத்து: தீயை கட்டுப்படுத்த போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

தேனி: தேனி அருகே கோடாங்கிபட்டியில் இருக்கும் மசாலா தயாரிப்பு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் ஈஸ்டன் எவரெஸ்ட் மசாலா நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 9 மணியளவில் அந்நிறுவன வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, போடி ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே, தீயணைப்பு வாகனங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் நிரப்புவதற்காக அல்லி நகரம் நகராட்சியில் இருந்து 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தியதில், நிறுவனத்தில் இருந்த குளிர்சாதன அறையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தீ பிடித்த 5 நிமிடத்திலேயே கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மசாலா பொருட்களும் சேர்ந்து எரிய தொடங்கியது தெரியவந்துள்ளது. மேலும் மசாலா பொருட்கள் எரிவதால் அப்பகுதியில் சுமார் 300 மீட்டர் பரப்பளவில் மசாலாவின் நெடியானது பரவி வருகிறது. இதன் காரணமாக  அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Tags : Theni ,spice factory ,firefighters , Theni, spice factory, fire
× RELATED ‘தேனீயாய் தேனி பெண்’...தள்ளுவண்டியில்...