×

யானைகள் வழித்தடத்தில் மின்கோபுரங்களை உயர்த்தும் பணி நடக்குமா?

கம்பம்: மேகமலை வன உயிரின சரணாயப்பகுதியில் யானைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில்,அவற்றின் வழித்தடத்தில் உள்ள மின் கோபுரங்களை உயர்த்தும் பணிக்கு 9.68 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து ஓராண்டாகியும் பணி இதுவரை நடைபெறவில்லை. வனவிலங்குகள் நலன் கருதி வனப்பகுதியில் மின் கோபுரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க என வன உயிரின ஆர்வலர்கள் மின்வாரியத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்ட வனப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் 2012ம் ஆண்டு முதல் மேகமலை வன உயிரினச்சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வனசரணாலயத்தில் கூடலூர், சின்னமனூர், மேகமலை, வருசநாடு, கண்டமனூர் மற்றும் கம்பம் கிழக்கு வனச்சரகம் உள்ளது.

இதில் சிறுத்தை, புலி, மான், யானை, காட்டு எருமை போன்ற விலங்குகளும், அரியவகை மரங்களும் உள்ளது. இதில் கம்பம் கிழக்கு வனச்சரகப் பகுதிக்குள் சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறுக்கு கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது. விதிகளின்படி மின் இந்த கம்பிகள் 30 அடி உயரத்தில் அமைக்க வேண்டும். இவை வென்னியாறு கிழக்கு மற்றும் வென்னியாறு மேற்கு பிரிவின் இணைப்பு பகுதியில் மிகவும் தாழ்வாக செல்கிறது.
இந்த உயர் அழுத்த மின்கம்பிகள் உரசி கடந்த ஆண்டு ஆறு மாதங்களில் ஐந்து யானைகள் உயிழந்தன. வனத்துறை, மின்வாரியத்தின் அலட்சியத்தால் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது என வழக்கறிஞர் மனோஜ் இமானுவேல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தார். இதையடுத்து மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பது குறித்து வனத்துறை முதன்மை செயலர், தமிழக மின்வாரிய தலைவருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், வனப்பகுதியில் புதிதாக மின்கோபுரம் அமைக்க அனுமதியில்லாததால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தற்போதுள்ள மின் கோபுரங்களை உயர்த்தி, மின்கம்பிகளை உயர்த்திக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் சம்பவ இடத்தில் சர்வே நடத்தி வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அதன்படி மின் கோபுரம் அமைக்க 9 கோடியே 68 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ அரசு மின்வாரியத்துறை செயலரிடம் சமர்பித்தனர்.

ஆனால், இந்த பணிக்கு மின்வாரியத்துறை ரூ.7 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்ததால் மின்கோபுரம் அமைக்கும் பணியினை தனியார் நிறுவனம் கைவிட்டது. நிதி ஒதுக்கீடு குளறுபடியால் பல மாதங்களாகியும் பணிகள் தொடங்காமல் உள்ளது. எனவே, வனவிலங்குகள் நலன் கருதி மின் கோபுரத்தை உயர்த்த வனத்துறையும், மின்வாரியத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மின்கோபுரங்களை அமைக்க தனியார் நிறுவனம் சம்பவ இடத்தில் சர்வே செய்து வழங்கி உள்ள திட்ட மதிப்பீட்டிற்கும், மின்வாரியத்துறை ஒதுக்கிய நிதிக்கும் வேறுபாடு உள்ளதால். தனியார் நிறுவனம் பணிகள் மேற்கொள்ள முன்வரவில்லை. இதனால் மீண்டும் மின்வாரியத்துறை சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தனியார் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ள திட்ட மதிப்பீட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் மறு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்’’ என்றார்.

Tags : towers ,road , Elephants
× RELATED காட்டு யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்