×

மந்தமானது மீன்பிடி தொழில்: சங்கு சேகரிப்பில் மீனவர்கள் ஆர்வம்

சாயல்குடி: சாயல்குடி கடற்கரை பகுதிகளில் மீன்பிடித் தொழில் மந்தமாக நடந்து வருவதால், மீனவர்கள் சங்கு சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்குகளை அரசு நேரடி கொள்முதல் செய்யவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி அருகே ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், ஒப்பிலான், மாரியூர், கீழமுந்தல், வாலிநோக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி ராமநாதபுரம் மாவட்டம் கடல் எல்லையில் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் எல்கை வரை பரந்து விரிந்திருக்கிறது. ஆழமாக உள்ள இக்கடலில் பவளபாறைகள் உள்ளிட்ட மணல் திட்டுகள் பாதுகாப்பு அரணாக இருப்பதால் மன்னார் வளைகுடா பகுதி என அழைக்கப்படுகிறது. ஆழமான கடல் என்பதால் இங்கு அதிகளவில் மீன் கிடைப்பதுடன், மற்ற கடல்பகுதி மீனை விட சுவை மிகுந்து இருப்பதால் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இரண்டு மாவட்ட மீனவர்களும் மீன்பிடித்து வருகின்றனர்.

மேலும் பவளபாறைகள், திமிங்கலம், டால்பின் போன்ற அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருவதால், அவற்றிற்கு தொந்தரவு செய்யாமல், மீனவர்கள் நடுக்கடல் பகுதிக்கு செல்லாமல், கடற்கரையிலிருந்து சுமார் 3 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டுமே மீன்பிடித்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் மீன் வரத்து குறைந்து, மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லை. இதனால் சங்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சாயல்குடி மீனவர்கள் கூறும்போது, தற்போது சில வாரங்களாக சாயல்குடி கடற்கரை பகுதியில் போதிய மீன்வரத்து இல்லை. வல்லம், நாட்டு படகில் கூலிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு மீன் பிடிக்க செல்லும்போது போதிய மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. இதனால் கூலி கொடுக்க வெளியில் கடன்களை வாங்கும் நிலை உள்ளது. மீனவ கடன் சங்கங்கள் மூலம் கடன் வழங்குவது கிடையாது. அரசு கொடுக்கும் மானிய விலை மண்ணெண்ணெய், டீசல் போன்றவையும் போதியதாக இல்லை. அவற்றை மானிய விலைக்கு வாங்க கூட வியாபாரிகளை நம்பி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கடனில் சிக்கி தவிக்கும் நிலை இருப்பதால் மீனவர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. மீனவ குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. இதுபோன்ற காரணங்கள் தற்போது மீனவர்கள் கடற்கரை ஓரங்களில் சங்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இப்பகுதியில் யானைமொழி சங்கு, ஐந்து விரல் சங்கு, பால் சங்கு போன்றவை மீன் வலைகளில் சிக்கி வரும், சங்கின் மேல்பகுதியில் இருந்து பிரித்தெடுக்கும் போது சுமார் 100 கிராம் நாகமை எனப்படும் ஒரு திரவ சதை கிடைக்கும், 1 கிலோ நாகமை ரூ.3ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதுபோன்று வெயிலில் காயப்போட்டு, உலர்த்தப்பட்ட சங்குகள் கிலோ ஒன்றிற்கு ரூ.5 முதல் 10 வரை விற்கப்படுகிறது, இதனை உத்திரபிரதேசம், ஆந்திரா, மஹாராஷ்டிரா, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்கு அழகு சாதன பொருட்கள், பெண்கள் அணியும் ஆபாரணங்கள் செய்ய வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

சிறிய வகை ஜோதி வடிவிலான சங்குகளை ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதி வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் சங்கு தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே சங்குகளை பிரித்தெடுத்து உலர்த்தி காயப்போட உலர்தளங்கள், எடை போடுவதற்கு மின்னணு திராசுகள், பாதுகாப்பாக சேமித்து வைக்க கிட்டங்கிகள் போன்றவற்றை கடற்கரைகளில் அரசு சார்பில் அமைக்கவேண்டும். அரசு தடை விதித்துள்ள சங்குகளை தவிர்த்து, மற்ற சங்குகளுக்கு போதிய விலை நிர்ணயம் செய்து, நேரடி கொள்முதல் செய்யவேண்டும் என்றார்.

Tags : Conch
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...