×

'ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான்': சர்ச்சைக்குரிய பேச்சால் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை

விழுப்புரம்: தேர்தல் பரப்புரையின் போது ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்கூறிய வகையில் பேசியதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்திருந்தது. இந்த நிலையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரைக்காக தஞ்சனுர் என்ற பகுதிக்கு சீமான் வருகை தந்திருந்தார்.

பரப்புரையின் போது, ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம், நாங்கள் கொன்றது சரிதான் என்ற வகையில் பேசியிருந்தார். இவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று விக்கரவாண்டி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் மாநில செயல் தலைவா் எம்.பி.,விஷ்ணுபிரசாத், முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், விழுப்புரம் மாவட்டத் தலைவா் பி.ரமேஷ் மற்றும் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.  

அதில், விக்கிரவாண்டியில் தோ்தல் பிரசாரத்தின்போது பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் செயல் என குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் ராஜிவ் காந்தி குறித்து அவதூறு பரப்பி வருகிறார் என தெரிவித்தனர். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 153, 504 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : death ,Seeman ,Rajiv Gandhi , Rajiv Gandhi, controversy, seaman, case record, police
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...