×

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்ய வாய்ப்பு என தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை சீரமைக்க, நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மேலும் வாரியத்தை நிர்வகிக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாகக் குழுவை அமைத்தது. லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என்.ஸ்ரீநிவாசன், குஜராத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் படேலை தலைவர் பதவிக்கு முன்னிறுத்திய நிலையில், பல மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும், அவை அனைத்தும் ஒரு மனதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும், முன்னாள் தலைவரும் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான அனுராக் தாகூரின் சகோதரருமான அருண் துமால் பொருளாளர் பதவிக்கும் முன்னிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மூன்று முக்கியமான பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்றும், ஸ்ரீநிவாசன் முன்னிறுத்திய பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Sourav Ganguly ,cricket board ,Indian ,India , Former India captain Sourav Ganguly is reported to have been selected as the chairman of the Indian cricket board
× RELATED சில்லிபாயின்ட்…