×

மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க அரசு உதவிபெறும் பள்ளியில் மாலை உணவு

சென்னை: பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்கவும், மூன்று வேளை உணவு கிடைக்காமல் மாணவர்கள் கஷ்டப்படுவதை தடுக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாலை உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 130 ஆண்டுகளாக மெட்ராஸ் புரோக்கிரெசிவ் யூனியன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இந்த பள்ளியில் தற்போது வாரத்தில் 5 நாட்கள் மாலை உணவு வழங்கப்பட்டு  வருகிறது. இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை நிர்மலா கூறியதாவது: எங்கள் பள்ளியில் தற்ேபாது 275 மாணவர்கள் படித்து வருகின்றனர். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் வால்டாக்ஸ் சாலை, பெரியமேடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான். இவர்களில் பெரும்பாலானோர்  ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், முதல்தலைமுறையாக பள்ளிக்கு வரும் மாணவர்கள்.  சிலர் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்கள்.

 எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு பல மாணவர்கள் மூன்று வேளை உணவு  இல்லாமல் அவதிப்பட்டதை அறிந்தோம். அதனால் முதல்கட்டமாக வாரத்தில் 3 நாட்கள் மாலையில் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். அதைத்தொடர்ந்து தற்போது வாரத்தில் 5 நாட்கள் மாலையில் உணவு வழங்கி வருகிறோம். எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் ஒவ்வொரு மாத சம்பளத்திலிருந்து ரூ.1,000 மாணவர் சேமநல நிதியாக வழங்கி வருகின்றனர். மாலை உணவை தயாரிப்பதற்கு 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் உணவு தயாரிக்கும் பணிக்கு செல்கின்றனர். இவ்வாறு தலைமை ஆசிரியை நிர்மலா கூறினார்.

அதே பள்ளியை சேர்ந்த மாணவர் உதயகுமார் கூறுகையில், ‘‘மாற்றுத்திறனாளி தாயுடன் நான் வசித்து வருகிறேன். தினசரி உணவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில், தற்போது மாலை உணவு திட்டத்தால் எனக்கு போதிய உணவு  கிடைக்கிறது’’. என்றார்.  
பத்தாம் வகுப்பு மாணவரின் தாயும், தினக்கூலி தொழிலாளருமான அமுதா கூறுகையில், ‘‘எங்கள் வீட்டில் யாராவது ஒருவர் சாப்பிடாமல் இருந்தால் தான் மற்றவர்கள் சாப்பிட முடியும். என்னுடைய மகன் தன்னுடைய 3 சகோதரிகள் சாப்பிட  வேண்டும் என்பதற்காக, சாப்பிடுவதை தவிர்த்து வந்தான். பள்ளியில் மாலை உணவு வழங்கும் திட்டத்தால் என்னுடைய மகன் பசியுடன் கஷ்டப்படுவதை பள்ளி நிர்வாகம் தடுத்துள்ளது’’ என்றார்.    Tags : school , Evening meals at a government-aided school to help reduce student enrollment
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...