×

சென்னையில் மீண்டும் வெள்ளம் வருவதை தடுக்க ரூ.2100 கோடியில் நிரந்தர வெள்ளத்தடுப்பு: உலக வங்கியிடம் திட்ட மதிப்பீடு தாக்கல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ரூ.2100 கோடியில் நிரந்தர வெள்ளதடுப்பு பணிக்கு உலக வங்கி நிதிக்கேட்டு தமிழக அரசு சார்பில் திட்ட மதிப்பீடு தாக்கல் செய்துள்ளது.   சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2015ல் பெய்த கனமழை காரணமாக, நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இந்த மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் கடும்  சேதத்தை சந்தித்தது. சுமார் 15 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் இருக்கும் என்று தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்தது. லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்தனர். இந்த சென்னை மாநகராட்சியில் 306 இடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்கள் மழை நீர் அதிகம் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில், மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், ரூ.2400  கோடி செலவில் நிரந்தர வெள்ள தடுப்ப பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து முதல்கட்டமாக ரூ.100 கோடி செலவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெள்ளத்தடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, ஏரிகளை ஆழப்படுத்துதல், வெள்ள உபரி நீர்  கால்வாய், பூமிக்கடியில் செல்லும் வகையில் பாதாள கால்வாய், ஏரிகளில் கலங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக வெள்ளத்தடுப்பு பணி மேற்கொள்ள ரூ.244 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிதியை கொண்டு புதிய நீர்த்தேக்கம், 3 இடங்களில் தடுப்பணை,வெள்ள உபரி நீர்  கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு டெண்டர் விட்டு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ரூ.2,100 கோடியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் அடையாறு, கூவத்தில் 6 இடங்களில் தடுப்பணை, 124 ஏரிகளை ஆழப்படுத்துதல், ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்ற உபரி நீர் கால்வாய்,  பூமிக்கடியில் செல்லும் வகையில் பாதாள கால்வாய்  உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, உலக வங்கியிடம் நிதி கேட்டு தமிழக அரசு சார்பில் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு பெற்று அடுத்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும் என்று  பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : flooding ,floods ,Chennai , Permanent flooding to prevent floods in Chennai: Rs.
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி