×

பார்வையாளர்களுக்கு இன்றுமுதல் அனுமதியில்லை கீழடி 5ம் கட்ட அகழாய்வு நிறைவு: நாளை முதல் குழிகள் மூடப்படும்

திருப்புவனம்: கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. பார்வையாளர் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. தொல்லியல் பொருட்கள் கிடைத்த அகழாய்வு குழிகளை நாளை முதல்  மூடப்போவதாக தொல்லியல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணிகள் கடந்த ஜூன் 13ல் தொடங்கியது. செப். 30ல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர்  பாண்டியராஜன் தெரிவித்தார். இதையடுத்து பணிகள் தொடர்ந்தன.

 இந்நிலையில், நான்காம் கட்ட அகழாய்வு பணியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து அகழாய்வு பணிகளையும், அதில் கிடைத்த உறைகிணறு,  செங்கல் கட்டுமானச்சுவர், செங்கல் தொட்டி கட்டுமானம், கட்டுமானத்  தளம் உள்ளிட்ட பல பொருட்களை பார்வையிடுவதற்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி கீழடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அகழாய்வு குழிகளை மூடவும் தொல்லியல் துறை  திட்டமிட்டுள்ளது. 2020, ஜனவரியில் ஆறாம் கட்ட அகழாய்வை தொடங்குவதற்கு, மத்திய தொல்லியல்துறையின் அனுமதி பெற வேண்டும். எப்போது அனுமதி கிடைக்கும், எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்த தகவல்  இல்லை என  தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

மியூசியம் அமைக்கப்படுமா? கீழடி அகழாய்வின் மூலம் உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும், பண்டைய தமிழர்கள்தான் உலகின் மூத்த குடிமக்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், அகழாய்வுக் குழிகளை மூடாமல் தொடர்ந்து  பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும். சைட் மியூசியமாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு இப்பகுதி மக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Visitors , Visitors are not allowed from today
× RELATED தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா...