×

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்கு பின் மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்: nகுடும்பம் குடும்பமாக குவிந்தனர்...சாலைகளில் வரிசை கட்டி நின்ற கார்கள்

சென்னை: மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்பு, சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகிய தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்திலுள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகியவைகளைக் காண கடந்த 8ம்  தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. மேலும் மாமல்லபுரத்தை சுற்றி 17 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெளிநபர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

முழுக்க முழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் மாமல்லபுரம் இருந்தது. அதேபோல, எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.   பின்னர், இரு நாட்டு தலைவர்கள்  வந்து சென்ற பிறகு நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கினர்.  இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், புதுப்பொலிவுடன் காணப்படுகின்ற மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்களுடனும்  காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள்  வெண்ெணய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவைகளை  பார்வையிட்டு போட்டோ மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து அமர்ந்து பேசிய கடற்கரை கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அறையை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.  மாமல்லபுரம் நகரம்  புதுப்பொலிவுடன் காணப்பட்ட சிற்பங்களை கண்டு ரசிக்க வரலாறு காணாத வகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில்  வந்திருந்தனர்.  இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  கார்கள் சாலையில் இரண்டு பக்கமும் வரிசை கட்டி நின்றது குறிப்பிடத்தக்கது.  இது போன்ற கூட்டத்தை ஆண்டுதோறும் வருகின்ற காணும் பொங்கலில் கூட இருந்தது இல்லை என்று  பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாமல்லபுரத்தின் மூத்த சுற்றுலா வழிகாட்டி எம்.கே. சீனிவாசன் கூறுகையில், ‘எழில்மிகு நகரமான மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களை காண கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா  பயணிகள் அதிகளவில் வரமாட்டார்கள். அதனால், போக்குவரத்து நெரிசல் இருக்காது. மாமல்லபுரத்தின் சாலையோரங்களில் அழகிய மரங்கள் செழிப்புடன் காணப்படும். ஆக்கிரமிப்பு கடைகள் கிடையாது.

இந்நிலையில், பிரதமர்  மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரம் நகரமே புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதை அரசு நிர்வாகத்தினர் தொடர்ந்து முறையாக பரமரிக்க வேண்டும்’ என்றார். அதேப்போல், மாமல்லபுரத்தின் மூத்த  புகைப்பட கலைஞர் ஆர்.சுப்ரமணியன் கூறுகையில், ‘இந்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலுள்ள எத்தனையோ தலைவர்கள் வந்து  சென்றுள்ளனர்.  ஆனால், பிரதமர் மோடி  - சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் நகரம்  புதுப்பொலிவைப் பெற்றுள்ளது.  

இந்த புதுப்பொலிவை பெற்றுள்ள மாமல்லபுரத்தைக் காண எப்போதுமில்லாதவாறு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு திரண்டுள்ளனர்.  இப்படி, இதுப்போன்ற பொலிவு தொடர்ந்தால், சுற்றுலாப் பயணிகள் வருகை முன்பை விட மேலும்  அதிகரிக்கும்’ என்றார்.
மாமல்லபுரம் மூத்த சிற்ப கலைஞர் ஜி.ரங்கசாமி கூறுகையில், ‘தற்போது இரு தலைவர்களின் மாமல்லபுரம் சந்திப்பு உலகளவில் பேசப்பட்டு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த  வரலாற்று சிறப்புமிக்க இரு நாட்டு தலைவர்களின்  வருகைக்கு காரணமான புகழ்ச்சியெல்லாம் மாமல்லபுரம் சிற்பங்களையும் குடைவரை கோயில்களையும் வடிவமைத்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவனையே சாரும். எனவே, இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் நிகழ்வாக மாமல்லபுரத்திலுள்ள கடற்கரை கோயில் நுழைவு வாயிலில் பல்லவ மன்னர் சிலை அமைக்க வேண்டும்’ என்றார்.

Tags : Modi ,Mamallapuram ,Chinese ,President Visits , Prime Minister Modi - Chinese President Visits to Mamallapuram
× RELATED சொல்லிட்டாங்க...