×

ஆயுதபூஜை விடுமுறையில் விதிமீறல் ஆம்னி பஸ் நிர்வாகங்களுக்கு ரூ.44 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை

சென்னை: நடந்து முடிந்த ஆயுத பூஜை தொடர் விடுமுறையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, ஆம்னி பஸ் நிர்வாகங்களிடமிருந்து ரூ.44 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான ‘ஆம்னி’ பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை, தமிழகம் மட்டும் அல்லாது அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற  மாநிலங்களுக்கும் செல்கின்றன. இத்தகைய பஸ்களில், ஒருசில மட்டும் சாதாரண நாட்களில், அரசு பஸ்களை விட குறைவான கட்டணத்தில் இயக்கப்படுகிறது. விஷேச தினங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு  உள்ளது. மேலும் சில நேரங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது.

இவற்றைத்தடுக்கும் வகையில் போக்குவரத்துத்துறை சார்பில் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது. அப்போது சட்டவிதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 8ம் தேதி ஆயுத பூஜை  கொண்டாடப்பட்டது. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறாக இருந்ததால், மக்கள் 4ம் தேதி இரவே சொந்த ஊர்களுக்கு சென்றனர். பிறகு அதிகமானோர் 9, 10ம் தேதிகளில் சென்னைக்கு திரும்பினர். அப்ேபாது அரசு பஸ்கள், ரயில்கள், ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண் சில ஆம்னி பஸ் நிர்வாகத்தினர்  பல்வேறு விதிமுறைகளை மீறினர். அவர்களிடமிருந்து ரூ.44 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை தொடர் விடுமுறையின் போது, சில ஆம்னி பஸ்  நிர்வாகத்தினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 72 குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது. சுமார் 10,262 பஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 2010 பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆய்வு செய்த இடத்திலேயே சாலைவரி உள்ளிட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.44,23,150 வசூல் செய்யப்பட்டது. மேலும்  ரூ.20,94,300 வசூல் செய்வதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 10 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு ரூ.47.22 லட்சம்

கடந்த ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையின்போது (17.10.18-22.10.18) ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவானது 12,831 பஸ்களில் ஆய்வு செய்தது. அப்போது  ₹47,22,728 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags : bus operators ,Omni , Omni bus operators fined Rs 44 lakh for transport violation
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி