×

கட்டிமுடித்து 10 மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராத ஆர்ஐ அலுவலகம்: அதிகாரிகள் மெத்தனம்

திருவொற்றியூர்: மணலியில் 23 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆர்ஐ அலுவலகம், 10 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.  திருவொற்றியூர் தாலுகாவுக்கு உட்பட்ட மணலி வருவாய்த்துறை ஆய்வாளருக்கு தனியாக அலுவலகம் இல்லை. இதனால் பொதுமக்கள் வாரிசு சான்று மற்றும் பட்டா சம்பந்தமாக சந்தேகங்களை தீர்க்க ஆய்வாளரை போன் மூலம் தொடர்பு  கொண்டு, அவர் எங்கே இருக்கிறார் என்று அறிந்து, அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை மணலி மண்டலம்  ஜாகீர்உசேன் தெருவில் 23 லட்சம் செலவில் வருவாய் துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, கடந்த 10 மாதங்களுக்கு முன் பணி  நிறைவு பெற்றது.  

ஆனால்,  இதுவரை இந்த கட்டிடம் திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், வருவாய் ஆய்வாளருக்கு அலுவலகம் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். மேலும்,  10 மாதமாக திறக்கப்படாமல் பூட்டி வைத்திருப்பதால் அந்த அலுவலகத்தில் ஆடு மாடுகள் தங்கும்  இடமாக மாறி வருகிறது. எனவே மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை உடனே பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : office ,RI , 10 months , build up, Unused RI's,Officials
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...