×

மாநகராட்சி பகுதிகளில் உள்ள 96 கி.மீ பஸ் வழித்தட சாலையில் 76 கோடியில் நடைபாதை வசதி: அதிகாரி தகவல்

சென்னை:  சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 387.35 கி.மீ நீள பேருந்து வழிதட சாலைகள் உள்ளன. இதை தவிர்த்து 5,623 கி.மீ நீள உட்புற சாலைகள்  உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து தட சாலைகளில்  பாதசாரிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக, எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலை, போலீஸ் கமிஷனர் அலுவலக சாலை உள்ளிட்ட 26 பேருந்து வழித்தட சாலைகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 46 சாலைகளில் நடைபாதைகள்  அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2018-19ம் ஆண்டு நிதியாண்டில் 74 கிலோ மீட்டர் நீளமுடைய சாலைகளில் 46 கோடி மதிப்பீட்டில் 31 நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
இதுதவிர வாகனம் சாரா போக்குவரத்து கொள்கையின்படி பல சாலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. தி.நகர் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள 96 கிலோ மீட்டர்  பேருந்து வழித்தட சாலைகளை மேம்படுத்தவும், நடைபாதைகள் அமைக்கவும் 76 கோடியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

 இதுகுறித்து பேருந்து சாலைகள் துறையின் தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறியதாவது: சென்னையில் பேருந்து வழித்தட சாலைகளில் குறுகலாக இருக்கும் நடைபாதைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 10 அடி நடைபாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீல்சேர் செல்லும்  வகையிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலைகளின் சந்திப்புகளில் டேபிள் டாப் முறையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு அவை வேகத்தடைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் வாகன எண்ணிக்கையை குறைக்க  பொதுமக்களை நடக்க வைக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் அமைக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.  87 கோடியில்உட்புற சாலை  சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள உட்புற தார் சாலைகள் மற்றும் சிமென்ட சாலைகளும் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக ₹87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் குறிப்பிட்ட சாலைகளில் நடைபாதைகளும்  அமைக்கப்படவுள்ளது.



Tags : bus route ,areas ,corporation areas ,bus route road ,walkway , corporation, 76km walkway , Official, Information
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...