×

மறைந்த கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம்: வாடிகனில் அறிவித்தார் போப்

வாடிகன் சிட்டி: மறைந்த கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா உள்பட 5 பேரை, புனிதராக போப் பிரான்சிஸ் நேற்று அறிவித்தார். கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 1914ம் ஆண்டு ‘சிஸ்டர்ஸ் ஆப் ஹோலி பேபிலி’ என்ற அமைப்பை உருவாக்கியவர் மரியம் திரேசியா. இவர் கேரளாவில் பள்ளிகள், விடுதிகள், அனாதை இல்லங்கள் கட்டி கல்வி மற்றும் சமூக சேவையில்  ஈடுபட்டார். ஏழைகளுக்கு உதவினார். நோய் வாய்ப்பட்டவர்களை கவனித்தார். அவரிடம் பல அற்புத சக்திகளும் இருந்துள்ளது. பலரது நோய்களை குணப்படுத்தி உள்ளார். இவர் கடந்த 1926ம் ஆண்டு தனது 50 வயதில் இறந்தார். இவரை ஆசிர்வதிக்கப்பட்டவராக கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் அறிவித்தார். சமூக சேவையில் அற்புதங்கள் நிகழ்த்தியவர்களுக்கு போப், புனிதர் பட்டம் வழங்குவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு புனிதர் பட்டத்துக்கு கேரளாவைச் சேர்ந்த மரியம் திரேசியா, இங்கிலாந்து கார்டினல் ஜான் ஹென்றி நியூமேன், சுவிஸ் கன்னியாஸ்திரி மார்கேரெட் பேஸ், பிரேசில் கன்னியாஸ்திரி டுல்சே லோப்ஸ், இத்தாலி  கன்னியாஸ்திரி கிசெப்பினா வன்னினி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களை வாடிகன் நகரில் உள்ள செயின் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் புனிதர்களாக போப் பிரான்சிஸ் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தலைமையிலான இந்திய குழுவினரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவருடன் சேர்த்து கேரளாவின் சைரோ-மலபார் தேவாலயத்தை சேர்ந்த 4 பேர் புனிதர் பட்டம் பெற்றுள்ளனர்.



Tags : Mariam Thrasia ,Kerala ,Pope ,Vatican ,nun , Late Kerala , Pope, Vatican
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...