×

இன்னிங்ஸ், 137 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா தொடரை வென்று இந்தியா சாதனை

புனே: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன் குவித்து (156.3 ஓவர்) முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அகர்வால் 108, புஜாரா 58, ரகானே 59,  ஜடேஜா 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் கோஹ்லி 254 ரன் (336 பந்து, 33 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (105.4 ஓவர்). டி காக் 31, கேப்டன் டு பிளெஸ்ஸி 64, மகராஜ் 72 ரன், பிலேண்டர் 44* ரன் எடுத்தனர். பிலேண்டர் - கேஷவ் மகராஜ் ஜோடி 9வது  விக்கெட்டுக்கு 109 ரன்  சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4, உமேஷ் 3, ஷமி 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்தியா 326 ரன் முன்னிலை பெற்ற நிலையில், பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்க அணி 4ம் நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே மார்க்ராம் டக் அவுட்டாகி வெளியேற, தென்  ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த டி புருயின் 8 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் விக்கெட் கீப்பர் சாஹா வசம் பிடிபட்டார்.

டீன் எல்கர் - கேப்டன் டு பிளெஸ்ஸி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. மிக நிதானமாக விளையாடிய டு பிளெஸ்ஸி  5 ரன் எடுத்து (54 பந்து) பெவிலியன் திரும்ப, எல்கர் 48 ரன் (72 பந்து, 8 பவுண்டரி), டி காக் 5 ரன் எடுத்து  அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன் என்ற நிலையில் இருந்து 79 ரன்னுக்கு 5 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது.ஓரளவு தாக்குப்பிடித்த பவுமா 38 ரன் (63 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஜடேஜா சுழலில் ரகானே வசம் பிடிபட்டார். முத்துசாமி 44 பந்துகளை சந்தித்து 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிலேண்டர் - மகராஜ் இணை 8வது விக்கெட்டுக்கு 56 ரன்  சேர்த்தது. பிலேண்டர் 37 ரன் (72 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மகராஜ் 22 ரன் (65 பந்து, 3 பவுண்டரி), ரபாடா 4 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (67.2 ஓவர்). நோர்ட்ஜே (0) ஆட்டமிழக்காமல்  இருந்தார்.இந்திய பந்துவீச்சில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3, அஷ்வின் 2, ஷமி, இஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆட்டமிழக்காமல் 254 ரன் விளாசிய கேப்டன் கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.  ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 40 புள்ளிகளையும் இந்தியா தட்டிச் சென்றது.மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

11வது தொடர் வெற்றி
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களில் வென்று ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியதால் 11வது வெற்றியுடன் ஆஸ்திரேலியாவை 2வது  இடத்துக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது. மேலும், 2013ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் விளையாடிய எந்த டெஸ்ட் தொடரிலும் தோல்வியைத் தழுவியதில்லை என்ற பெருமையை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.

50ல் 30 வெற்றி!
கோஹ்லி தலைமையில் இந்திய அணி விளையாடிய 50 டெஸ்ட் போட்டிகளில் 30வது வெற்றியை பெற்றுள்ளது. இவற்றில் வெளிநாட்டில் விளையாடிய 27 டெஸ்டில் 13 வெற்றியும், சொந்த மண்ணில் விளையாடிய 23 டெஸ்டில் 17 வெற்றியும்  பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஸ்டீவ் வாஹ் 50 டெஸ்டில் 37 வெற்றி, ரிக்கி பான்டிங் 50 டெஸ்டில் 35 வெற்றி பெற்றுள்ளனர்.
* இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் வென்றது, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. முன்னதாக 2009-10ல் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ், 57  வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

ஒயிட்வாஷ் செய்வோம்...: கோஹ்லி உற்சாகம்
தொடரை வென்று சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக யாரும் ரிலாக்ஸ் செய்யப்போவதில்லை. இதே முனைப்புடன் விளையாடி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்ய முயற்சிப்போம். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள்  முக்கியம் என்பதால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கத்துடனேயே விளையாடுவோம். ரகானே உடனான பார்ட்னர்ஷிப் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருடன் இணைந்து பேட் செய்வது நல்ல அனுபவம். சாஹா அருமையாக  விக்கெட் கீப்பிங் செய்தார். அஷ்வின் சுழற்பந்துவீச்சும் அற்புதம்.


Tags : India ,South Africa ,innings , South Africa ,137 runs, India win , series
× RELATED தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது