×

திருச்சுழி அருகே பாழடைந்த சாலையோர கிணறால் விபத்து அபாயம்: தடுப்புச்சுவர் எழுப்ப கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே பள்ளி செல்லும் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பாழடைந்த கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது பி.தொட்டியாங்குளம் கிராமம். இங்கு 700க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றன. மேலும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருப்புக்கோட்டை, ஆத்திபட்டி, பாளையம்பட்டி திருச்சுழி உள்ளிட்ட ஊர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். காரியபட்டி, கல்குறிச்சிக்கு செல்ல குறுக்கு வழியாக தொட்டியாங்குளம் சாலையை மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளி இருப்பதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்த சாலையோரம் 20 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு உள்ளது. தடுப்பு இல்லாமல் திறந்தவெளியில் இருப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொட்டியாங்குளத்தை பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள தனியார் கிணறு சாலையோரம் அமைந்துள்ளது. இந்த கிணற்றிலிருந்து தோட்டத்திற்கு பல வருடங்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்சினர். நாளடைவில் தண்ணீர் வறண்டதால் கிணற்றில் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர். முன்பு சாலை பள்ளமாகவும், கிணறு மேடாக இருந்து வந்தது. தற்போது சாலை எது, கிணறு எது என தெரியாத அளவிற்கு சமமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிக்கும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் முன் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்’ என்றனர்

Tags : Tiruchi ,roadside , Trichy, dilapidated roadside well, accident risk
× RELATED புதுக்கோட்டை அருகே அண்ணாநகர்...