இரவில் தொடரும் கன மழை: குன்னூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நிலங்களில் நீர் புகுந்தது

குன்னூர்: குன்னூர் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் இப்பகுதியில் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாகுபடி நிலங்களில் நீர் புகுந்து, பயிர்கள் நாசமாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் இருந்து கேத்தி பள்ளத்தாக்கு வழியாக காட்டேரி அணைக்கு செல்லும் ஆறு குன்னூர் சுற்று வட்டார பகுதிகள் வழியாக செல்கிறது. குன்னூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு தோறும் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வழிந்தோடிய நீர் ஆற்றில் வெள்ளப்பெருக்காக
ஓடியது. அது சில இடங்களில் வெளியேறி சாகுபடி நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று இரவு பெய்த கன மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோலணிமட்டம், கேத்திபாலாடா, செலவிப்நகர், முட்டிநாடு, கொல்லிமலை போன்ற பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களில் புகுந்து வருகிறது. இதில் உள்ள கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை மூழ்கடித்தும், நாசம் செய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. நிலங்களில் உள்ள மழை நீர் வடிவதற்குள் தொடர்ந்து வரும் ஆற்று நீரால் பாதிக்கப்பட்ட நிலங்களை  சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு, கோலணிமட்டம், கேத்திபாலாடா பகுதியிலுள்ள ஆற்றை தூர்வாராதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதியிலுள்ள ஆற்றை தூர்வாரி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Coonoor River ,Floods ,lands , Heavy rains continue at night: Flooding in the Coonoor River Flooded the lands
× RELATED இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை...