×

வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னை: வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதாக தெரிவித்தார்.

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்அடுக்கு கிழக்கு திசையில் காற்று வீசத் துவங்கியுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்திருப்பதாகவும் கூறினார். அதிகபட்சமாக கோபிச்செட்டிப்பாளையத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகக் கூறிய அவர், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என தெரிவித்தார். அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 44 சென்டி மீட்டர் மழையை தமிழகத்திற்கு தருவது இயல்பு எனவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

Tags : Balachandran ,Meteorological Center South Region , Northeast Monsoon, start on Oct. 17, Director of Meteorological Center South Region, Balachandran
× RELATED வல்லவன் வகுத்ததடா படத்தில் 5 பேரின் ஹைப்பர்-லிங்க் கதை