×

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விபத்தை தடுக்க புதிய பில்லர் பாக்ஸ்கள் அமைப்பு: மின் துறை அதிகாரிகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விபத்தை தவிர்க்க புதிய பில்லர் பாக்ஸ்கள் அமைக்கும் பணியில், மின்சாரவாரியம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் 2.60 கோடிக்கும் மேலான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை மின்வாரியம் விநியோகித்து வருகிறது. அதிகமான இடங்களில் சாலையோரங்களில் மின்கம்பங்கள் அமைத்து வயர்கள் வழியாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் பூமிக்கடியில் வயர்கள் புதைக்கப்பட்டு , அதன் மூலமாக மின்விநியோகம் நடக்கிறது. இதற்காக ஆங்காங்கு சாலையோரங்களில் பில்லர் பாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாக்ஸ்களுக்கு மின்நிலையங்களில் மின்சாரம் கொண்டுவரப்படும். பிறகு பாக்ஸில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இணைப்பு கொடுப்படுகிறது.


இதனால் எப்போதும் சம்மந்தப்பட்ட பாக்ஸில் மின்சாரம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் மாநிலத்தில் பல இடங்களில் இந்த பாக்ஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவை பாதுகாப்பற்ற நிலையில் பல இடங்களில் திறந்து கிடக்கிறது.
வயர்கள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின்பெட்டிகள் திறந்து கிடந்தது. அதன் அருகே மழைநீர் குளம் போல் தேங்கியிருந்தது, அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் தண்ணீரில் கால்வைத்தனர். இதில் மின்சாரம் தாக்கி அவர்கள் இறந்து விட்டனர். ஆனால் மின்வாரியம் ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன் மின் பெட்டிகளை முறையாக பராமரிக்கவில்லை என தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் மின் பெட்டிகள் பழுது மற்றும் மின்தடை தொடர்பாக  புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதையடுத்து மின்வாரியம் உடனடியாக பில்லர் பாக்ஸ்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது இதற்கான பணியில் தீவிரம் காட்டப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பழுதடைந்த மின்பெட்டிகளுக்கு பதிலாக, புதிய பெட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் உடைந்த மின்கம்பங்களும் மாற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்’’ என்றார்.


Tags : power crashes ,country ,Tamil Nadu ,accident , Tamilnadu , various parts , country , prevent electrical accident
× RELATED தமிழ்நாடு மக்கள் மீது நான்...