×

அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எதிரொலி முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீது ஒரு நாளில் பதில் அளிக்க வேண்டும்

* தவறினால் பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை * முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை

சென்னை: முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீது அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் பொதுப்பணித்துறை பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்களின் நிலுவை குறித்து தலைமை செயலாளர் செயலக மட்டத்திலும், அரசு முதன்மை செயலாளரால் துறை மட்டத்திலும் ஆய்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மனுவின் மீதான தீர்வினை விரைவுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

W குறியீடு கொண்ட மனுக்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். P குறியீடு கொண்ட மனுக்களுக்கு 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். C குறியீடு கொண்ட மனுக்களுக்கு 3 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் (மிகவும் தகுந்த பதில் அளிக்க வேண்டும்), மற்ற குறியீடு கொண்ட மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். எனவே, இனி வருங்காலங்களில் பதிலினை தகுந்த (இறுதி பதிவறிக்கை மட்டும்) மற்றும் விவரமான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்காணும் அறிவுரைகளின் படி முதல்வரின் தனிப்பிரிவு மனுக்களை தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், முதல்வர் தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் போது விசாரணை அதிகாரியின் பெயர், விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி, விசாரணை நடைபெற்ற நாள் அவர்களது கடித எண் ஆகிய விவரங்களுடன் இறுதி பதிவறிக்கையினை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் இப்பொருள் குறித்து தக்க அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,conflict , Authorities, negligence, complaint, echo, chief minister, division petitions, one day, reply
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...