×

தூத்துக்குடி மண்டல அளவில் வாட்ஸ் அப் குரூப் துவக்கி வானிலை தகவல் பரிமாற்றம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம்  போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது முதல்நிலை பொறுப்பாளர்கள்  மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து பேசுகையில், ‘‘மாவட்டத்தில்  மழை வெள்ளத்தினால் 4 இடங்கள் மிகவும் அதிக பாதிப்பு ஏற்படும்  இடங்களாகவும், 9 இடங்கள் அதிகமாக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 11  இடங்கள் ஓரளவு பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 12 இடங்கள் குறைந்த அளவு  பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த  36 இடங்களிலும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களை கொண்டு 36 மண்டல  அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள துறைகளை சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
 
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பேரிடர் காலங்களில் முதல் நிலை பொறுப்பாளராக  துரிதமாக செயல்பட வேண்டும். TN SMART  செயலியை  பதிவிறக்கம் செய்து அனைவரும் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் தங்களது  பகுதியில் பேரிடர் ஏற்பட வாய்ப்பு குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள  முடியும். மேலும் வானிலை நிலவரம் குறித்து அவ்வப்போது தெரிந்துகொள்ள  இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். மண்டல அளவிலான குழுக்கள் வாட்ஸ் அப்  குரூப் துவக்கப்பட்டு அதன் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை  மற்றும் சத்ய சாய் பேரிடர் மேலாண்மை குழுவினர் நடத்திய பேரிடர் மீட்பு செயல் விளக்கத்தையும், பேரிடர் கால  பயன்பாட்டு கருவிகள், இயந்திரங்களையும்  கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

கூட்டத்திற்கு எஸ்.பி. அருண் பாலகோபாலன் முன்னிலை  வகித்தார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத்  சிங் காலோன்,  திட்ட இயக்குநர் தனபதி,  ஆர்டிஓக்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), சுகாதார  பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமுதா(பொது), பாலசுப்பிரமணியன்  (வளர்ச்சி), பாலசுப்பிரமணியன் (வேளாண்மை) மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Sandeep Nanduri ,Thoothukudi Zone ,Thoothukudi ,Launcher ,Whats Up Group , Thoothukudi, Regional Level, Whats Up Group, Launcher, Weather Communication, Collector Sandeep Nanduri, Information
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...