×

சொத்து பிரச்னையில் தாய், தந்தையை கொன்று நாடகமாடிய மகன் கைது: உடந்தையாக இருந்த மாமியாரிடம் விசாரணை

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெற்றோரை அடுத்தடுத்து கொன்று நாடகமாடிய மகன் கைதானார். உடந்தையாக இருந்த மாமியாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். மனைவி செல்லாயி. இவர்களுக்கு 11 குழந்தைகள். இதில் தற்போது இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர். மூத்த மகன் முத்து(42). கண் பார்வையற்றவர். மற்றொரு மகன் சோனைமுத்து(29). இவரது மனைவி சுகன்யா. ஆறுமுகத்தின் மகள் செல்வி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது மகன் பாண்டியை, ஆறுமுகம் தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆறுமுகம் இறந்தார். அவர் இயற்கை மரணம் அடைந்ததாக கூறி சோனைமுத்து உள்ளிட்டோர் அடக்கம் செய்து விட்டனர்.

கடந்த 8ம் தேதி செல்லாயி வீட்டின் பின்புறம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இவரை, மாமா சோனைமுத்து கொன்றதாக கூறி பேரன் பாண்டி, தேவகோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீசார், சோனைமுத்துவை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சோனைமுத்துவை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, தந்தை ஆறுமுகத்தையும், தாயை விஷம் கொடுத்து கொன்றதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நேற்று மதியம் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலைய போலீசார், காரைக்குடி டிஎஸ்பி அருண், தேவகோட்டை தாசில்தார் மேசியாதாஸ் தலைமையில், டாக்டர் நடராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சோனைமுத்துவை அழைத்துக் கொண்டு கண்ணங்கோட்டை மயானத்திற்கு சென்றனர். அங்கு சோனைமுத்து காட்டிய இடத்தில், புதைக்கப்பட்ட தந்தை ஆறுமுகத்தின் எலும்புக்கூடாக இருந்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் உடற்கூறு சோதனை மையத்திற்கு எடுத்துச் சென்றனர். சோனைமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இச்சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, மாமியார் தெய்வானையிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தேவகோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலாத்கார வழக்கில் சிக்கியவர்
சோனைமுத்து ஏற்கனவே கடந்த 2016ல், பள்ளி மாணவியை, சிலருடன் சேர்ந்து கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகத்தின் மூத்த மகன் முத்து கூறுகையில், ‘‘எங்களது சொத்து புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் வருவதால் சொத்திற்கு அரசு இழப்பீடு தொகை வழங்கியது. அதனை எனது பெற்றோர் பேரன் பாண்டிக்கு பங்கு எடுத்து வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனைமுத்து, அவரது மனைவி சுகன்யா, மாமியார் தெய்வானை ஆகியோர் எனது பெற்றோருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர்’’ என்றார்.


Tags : mother-in-law ,property dispute , case of property dispute, mother, father, son killed, drama, arrested
× RELATED சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல்:...