×

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: உபரி நீர் வெளியேற்றம்

கோபி: கோபி அருகே உள்ள  குண்டேரிப்பள்ளம் அணை குன்றி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 42 அடி உயரமுள்ள இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் வந்து சேர்கிறது. தேக்கி வைக்கப்படும் இந்த தண்ணீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணையின் மூலம்  குண்டேரிப்பள்ளம், வினோபா நகர், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், மோதூர்  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர்  விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை  அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நள்ளிரவு 10 ஆயிரம் கன அடி நீர்  வரத்து இருந்தது. இதனால் அணை நேற்று காலை நிரம்பியது.

இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை 6 மணிக்கு  நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாகவும், 7 மணிக்கு 3 ஆயிரம் கன அடியாகவும்  குறைந்தது. தற்போது அணைக்கு வரும் உபரி நீர் 3 ஆயிரம் கன அடி நீர் முழுமையாக  வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பியதை தொடர்ந்து குண்டேரிப்பள்ளம், வினோபா நகர், வாணிபுத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் பவானி ஆற்றில் கலந்து வீணாகிறது. இதை தடுக்க மூன்று இடங்களில் தடுப்பணை அமைக்கவும், அணை கட்டப்பட்ட பிறகு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரவும் கோரிக்கை எழுந்தது.
 தூர்வாராமல் உள்ளதால் அணையில் சுமார் 10 அடிக்கும் மேல் சேறும், சகதியுமாக உள்ளது. எனவே அணையில் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே அணையில் தண்ணீர் குறையும் காலங்களில் அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunderippallam Dam , Gunderippallam Dam, filled,: Excess water,discharge
× RELATED ஈரோடு -கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று...