×

பீதியில் அப்பாவி மக்கள் கரூர் பைபாஸ் சாலையில் தொடரும் விபத்துகள்

*  மேம்பாலம் அமைக்கப்படுமா?
*  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்: கரூர் திருச்சி மற்றும் கரூர் சேலம் பைபாஸ் சாலைகளின் குறுக்கே கிராமப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயர்மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்கப்படுமா? என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர்-திருச்சி இடையே பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து குளித்தலை, கரூர், திண்டுக்கல், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த பைபாஸ் சாலையின் வழியாக வந்து கரூர், திருச்சி மற்றும் கரூர் மதுரை பைபாஸ் சாலைகள் இணையும் இடமான சுக்காலியூர் வந்து, பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது. இந்த சாலைப்பகுதியில் வீரராக்கியம், கோடங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சந்திப்பு சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வீரராக்கியம் சந்திப்பு பகுதியில் கரூர் திருச்சி மட்டுமின்றி, வீரராக்கியம், புலியூர், கட்டளை, உள்வீரராக்கியம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரராக்கியம் பிரிவு சாலையின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

கரூர் திருச்சி பைபாஸ் அமைக்கப்பட்டு துவங்கப்பட்ட சமயத்திலேயே இந்த பகுதியில் குகை வழிப்பாதை அமைக்கப்பட வேண்டும் என இந்த பகுதியினர் வலியுறுத்தி சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த பகுதியில் நடந்த சாலை விபத்துக்களில் மட்டும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் மக்கள் வீரராக்கியம் பிரிவுச் சாலையின் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் கோடங்கிப்பட்டி அருகேயுள்ள பைபாஸ் சாலையின் வழியாக கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி, ஈசநத்தம், பாகநத்தம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும், இந்த பகுதியில் இருந்து ராயனூர், தாந்தோணிமலை, கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்களும் கோடங்கிப்பட்டி வழியாக வந்து செல்கின்றனர்.இந்த சந்திப்பு பகுதியில் மட்டும் வாகன குறுக்கீடு காரணமாக, நடந்த சாலை விபத்துக்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது சம்பந்தமான வழக்குகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கரூர் திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளதோடு, பலமுறை இந்த பகுதியில் சாலை மறியலும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல், தங்க நாற்கரச் சாலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வரும் கன்னியாகுமரி-பெங்களூர் இடையிலான பைபாஸ் சாலையில் மதுரையில் இருந்து சேலம் வரையிலான பைபாஸ் சாலை உள்ளது. இதில், கரூர் சேலம் பைபாஸ் சாலையில் கரூர் மாவட்ட பகுதியில் வரும் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதி சந்திப்பு சாலைகளும் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. மண்மங்கலம் பகுதியின் வழியாக செல்லும் இந்த பைபாஸ் சாலையை சுற்றிலும் அதிகளவு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சுற்றிலும் உள்ள பொதுமக்கள், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு மண்மங்கலம் வந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்த சந்திப்பு பகுதிகளிலும் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பலமுறை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு முறை மாவட்ட எஸ்பியே சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தை கலைக்கும் அளவுக்கு இந்த பகுதியில் பெரியளவில் சாலை மறியல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக, தவிட்டுப்பாளையம் சந்திப்பு பகுதி உள்ளது. நாமக்கல் மாவட்ட எல்லையின் அருகில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம், பரமத்தி வேலூர், வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, காட்டுப்புத்தூர், மோகனூர், தொட்டியம், முசிறி, ஜேடர்பாளையம், நொய்யல், புன்னம்சத்திரம், கொடுமுடி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் தவிட்டுப்பாளையம் பகுதியை கடந்துதான் செல்கின்றனர். இந்த பகுதியிலும், அதிகளவு வேகத்துடன் வரும் வாகனங்களால் குறுக்கிடுபவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவும், தவிட்டுப்பாளையம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் போன்ற பாதுகாப்பு அரண்கள் கொண்டு வர வேண்டும் என பலமுறை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, கரூர் மாவட்ட பைபாஸ் சாலைகளில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளான தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் ஆகிய பகுதிகளில் கட்டாயம் குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருவதால், மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினர்களும் இந்த பகுதிகளில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இது குறித்து முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தற்போதைய கரூர் எம்பி ஜோதிமணி உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் இந்த பகுதியினர் உயர்மட்ட பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.இதனடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் உட்பட துறை அதிகாரிகள் இந்த குறிப்பிட்ட நான்கு பகுதிகளில் மட்டுமின்றி, கூடுதலாக, கரூர் சேலம் பைபாஸ் சாலை மற்றும் மதுரை பைபாஸ் சாலைகளில் உள்ள, செம்மடை, பெரியார் வளைவு உட்பட 3 இடங்களில் உயர் மட்ட பாலம் கொண்டு வருவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 7 பகுதிகளில் குகைவழிப்பாதை மற்றும் உயர்மட்ட பாலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் சார்பில் இந்த பகுதிகளில் குகைவழிப்பாதை மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் கிடைத்ததும் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக குகை வழிப்பாதை அல்லது உயர்மட்ட பாலப்பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை முடிந்து, ஒப்புதல் கிடைத்து, பணிகள் துவங்கப்படும் பட்சத்தில் விபத்துக்கள் வெகுவாக குறைவதோடு, வாகன ஓட்டிகளும் பயமின்றி எளிதில் கடந்து செல்வார்கள் என்பது நிச்சயம். லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி விளக்கம்: கரூர் திருச்சி பைபாஸ் சாலை மற்றும் கரூர் மதுரை பைபாஸ் சாலைகளில் தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் ஆகிய சந்திப்பு பகுதிகள் எங்கள் எல்லையில் உள்ளன. நான்கு பகுதிகளிலும் குகை வழிப்பாதை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இந்த பணிகள் மேற்கொள்ள ரூ. 30கோடி முதல் ரூ. 35 கோடி வரை செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மற்ற 3 இடங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாக மற்ற துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை அனுப்பியுள்ளனர் என்றார்.

பொதுநல ஆர்வலர் சண்முகம்: கோடங்கிப்பட்டி, தவிட்டுப்பாளையம், மண்மங்கலம், வீரராக்கியம் போன்ற பகுதிகளில் உள்ள சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. விபத்தினை தொடர்ந்து, சாலை மறியலும் நடத்தப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கும் இழப்பு, கால நேரமும் விரயமாகி வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதே. இந்த பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் சார்பில் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பணிகள் விரைந்து நடக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கினால், பொதுமக்கள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைவார்கள். மற்ற வாகனங்களும் எந்தவித பிரச்னையும் இன்றி எளிதாக சாலைகளை கடந்து செல்வார்கள் என்றார்.

Tags : Karur Bypass Road Accidents ,Karur Bypass Road , Accidents,continue , Karur Bypass, Road
× RELATED கரூர் பைபாஸ் சாலை சுக்காலியூரில்...