×

சில்மிஷம், சீண்டல்களால் சிறார் தவிப்பு அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்

கோவை: தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் சில்மிஷம், சீண்டல்களால் சிறார் பாதிப்பது அதிகரித்து வருகிறது. போக்சோ வழக்குகள் அதிகரித்தும் சேட்டை கும்பலின் அட்டகாசம் நீடிக்கிறது.  தமிழக மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டில் சிறார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக (போக்சோ சட்டம்) 272 வழக்குப்பதிவானது. கடந்த 2018ம் ஆண்டில் 305 வழக்குப்பதிவானது. கோவை நகரில், போக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டில் 23 வழக்குப்பதிவு செய்தனர். இதில் 28 பேர் கைதானார்கள். நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் வரை 20 வழக்குப்பதிவானது. 23 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 34 வழக்குப்பதிவானது. 39 பேர் கைதானார்கள். நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் வரை 27 வழக்கில், 34 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த 2018ம் ஆண்டில் 121 பலாத்கார வழக்குப்பதிவானது. நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் வரை 80க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குப்பதிவானது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாக விசாரிக்கவேண்டும். வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்யக்கூடாது என போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சிறார் பாலியல் துன்புறுத்தல் வழக்கு திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது. பிரிந்த குடும்பம், கவனிக்க, வளர்க்க ஆளில்லாத சிறார்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் இரண்டாவது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சில மாதம் முன் கோவை செல்வபுரத்தில் பள்ளி சிறுமி ஒருவர், தனது தந்தை, சித்தப்பா மீது பாலியல் புகார் கூறியதின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவையில் பள்ளி மாணவி ஒருவர் கல்லூரியில் படிக்கும் தனது அண்ணன் பாலியல் ரீதியாக அத்துமீறியதால் கர்ப்பமடைந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க குடும்பத்தினர் முன் வரவில்லை. சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிந்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கு மண்டல மாவட்டங்களில் சிறார் மீதான பாலியல் வழக்குகள் அதிகரித்தபோதிலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் நீடிக்கிறது. போலீசாரும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழக்குகளை பதிவு செய்வதில் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. 18 வயதிற்குட்பட்ட இளம் சிறார் காதல் வயப்பட்டு காதலருடன் வீட்டை விட்டு வெளியேறினால் பெற்றோர் போக்சோ வழக்கில் புகார் அளிப்பது பரவலாக நடக்கிறது. பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என தெரியாத நிலையிலும் சிலர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகார வழக்குகள் பெரும்பாலானவை போக்சோ சட்ட வரம்பிற்குள் வருகிறது. போலீசார் இந்த வழக்குகளை கையாள்வதில் குழப்பமாகவும், முரணாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது.   இது தொடர்பாக கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், சைல்ட் அமைப்பினர் கூறுகையில், ‘‘ காதல் விவகாரத்தில் வீட்டைவிட்டு வெளியேறும் காதல் ஜோடிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து தெளிவான புரிதல் இல்லை. இளைஞர்கள் சிலர், திருமணம் செய்துவிட்டு அதை மறைத்து, 18 வயது நிரம்பாத இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி அழைத்து சென்று இரண்டாவது திருமணம் செய்கின்றனர்.

இந்த விவகாரம் தெரியவந்தால் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம். சில பகுதிகளில் எங்களுக்கு வரும் புகார் அழைப்பு தொடர்பாக விசாரிக்கிறோம். பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் புகார் தர முன் வராவிட்டால் நாங்களே புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வைக்கிறோம். செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, சூலூர், அன்னூர் உள்ளிட்ட வட்டாரங்களில் உரிய திருமண வயதை எட்டாத நிலையில் திருமணம் செய்வதாக புகார் வருகிறது. திருமண வயது எட்டாத நிலையில் பெண்ணுக்கு திருமணம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்து வருகிறோம். மாவட்ட அளவில் நடப்பாண்டில், 70க்கும் மேற்பட்ட 18 வயதிற்கு குறைவான இளம்பெண்களின் திருமணம் தடுக்கப்பட்டது, ’’ என்றனர். சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிந்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

‘தவறான தொடுதல்’ விழிப்புணர்வு
குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் அரசு பள்ளிகள் உட்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். இதில் தவறான தொடுதல், பாலியல் அத்துமீறல் தொடர்பாக விளக்கமளித்து வருகின்றனர். 16 வயதிற்கு மேற்பட்ட மாணவிகள் சிலர் தவறான தொடுதல், பாலியல் அத்துமீறல் தெரியாத நிலையில் இருப்பது பள்ளிகளில் நடந்த ஆய்வில் தெரியவந்தது. சூலூரில் நடந்த ஆய்வின்போது மாணவிகள் சிலர் தவறான தொடுதல் தொடர்பாக சிலர் மீது புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வழக்குப்பதிவானது. நகர் பகுதிகளை காட்டிலும் கிராம பகுதியில் இளம் சிறார் மீதான பாலியல் அத்துமீறல் புகார் அதிகமாகி வருகிறது. இளம் சிறார்களை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து வளர்க்கவேண்டும். தவறான தொடுதல் தொடர்பாக கற்று தரவேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்தனர்.



Tags : Paxo ,Chilisham ,Sindhal ,chilmisam , Paxo cases , childhood,malnutrition,chilmisam
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை...