×

குமரி முழுவதும் வீடுகளில் தொடர் கொள்ளை துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்: செயின் பறிப்பும் அதிகரிப்பால் பெண்கள் அச்சம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வீடுகளில் நடந்து வரும் தொடர் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 4 துணை போலீஸ் சரகங்கள் உள்ளன. 35 காவல் நிலையங்கள் வருகின்றன. தமிழகத்தின்  சிறிய மாவட்டம் என்றாலும் கூட பணப்புழக்கம் அதிகம் நிறைந்த மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்று. தற்போது பெருகி வரும் கொள்ளை சம்பவங்களில் இருந்து, குமரி  மாவட்டமும் தப்பி விட வில்லை.  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கொள்ளையர்கள்  நுழைந்து தொடர்ச்சியாக கைவரிசை காட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், நகை கடைகள் உள்ளிட்டவற்றில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை வைத்து குற்றவாளிகளை எளிதில் காவல்துறை அடையாளம் கண்டு கொள்ளும்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. சமீப காலமாக அரங்கேறும் கொள்ளை சம்பவங்களில் போலீசாருக்கு எந்த வித துப்பும் கிடைக்க வில்லை.  பெரும்பாலான கொள்ளை சம்பவங்களில் ஆள் இல்லாத வீடுகளை குறி வைத்து நடந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி சாவகாசமாக கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். நாகர்கோவிலில் அதிக குடியிருப்புகள் நிறைந்த பகுதி நேசமணிநகர் ஆகும். மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யில் தொடங்கி  மாவட்ட நீதிபதி, தொழிலதிபர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வர்த்தக நிறுவன முதலாளிகள் என பல வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பகுதி நேசமணிநகர் ஆகும். நேசமணிநகர் காவல் நிலைய பகுதி என்பது மாநகரத்தின் இதய பகுதி போன்றது. ஆனால் இந்த காவல் நிலைய பகுதியில்  கூட தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதே போல் மிகப்பெரிய வர்த்தக பகுதியான கோட்டார், வடசேரி காவல் நிலைய பகுதியிலும் கொள்ளைகள் நடப்பது வாடிக்கையாகி உள்ளது. ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி என மாநகரை விட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள காவல் நிலைய பகுதிகளிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதே போல் மாவட்டத்தின் மற்றொரு வர்த்தக பகுதியான மார்த்தாண்டம், தக்கலையும் கொள்ளையர்களின் பிடியில இருந்து தப்ப வில்லை. அதிக ரப்பர் தோட்டங்கள்  நிறைந்த பகுதியான குலசேகரம், திருவட்டார், அருமனை பகுதிகளிலும் கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அதிகம் பேர் உண்டு. எந்த வீட்டில் அதிக பணம் இருக்கிறது.

ஆள் இல்லாத வீடு எது என்பதெல்லாம் கொள்ளையர்களுக்கு நன்கு தெரிந்து கைவரிசை காட்டி வருகிறார்கள். கடந்த 6 மாதங்களில் 40 இடங்களுக்கு மேல் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதில் பெரும்பாலான திருட்டு, ெகாள்ளை சம்பவங்களில் காவல்துறை வழக்கு பதிவு செய்வது கூட இல்லை. கொள்ளை சம்பவங்களில் அதிக சம்பவங்கள் நள்ளிரவு 1 மணியில் இருந்து அதிகாலை 3 மணிக்கு உட்பட்ட நேரங்களில் நடந்து இருக்கிறது. சில இடங்களில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி சென்று உள்ளனர். வெளியூர் சென்றால் தனது வீட்டில் உள்ள பணம், நகைகள் பறி போய் விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது. இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகம் நடந்துள்ளன. பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்து பெண்களின் கழுத்தில் கிடந்த செயின்களை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்களும் உண்டு. இந்த செயின் பறிப்பில் 25 வயதில் இருந்து 30 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் தான் ஈடுபடுகிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதே போல் போலீசாக நடித்து பல பெண்களிடம் தொடர்ச்சியாக நகைகளை பறித்துள்ளனர். முக்கிய சாலைகளில் நடந்து செல்லும் வயதான பெண்களை ஏமாற்றி, நகைகளை கழற்ற செய்து தொடர்ச்சியாக கைவரிசை காட்டி உள்ளனர்.

இது போன்ற சம்பவங்களில் எல்லாம் காவல்துறை வழக்கு பதிவு செய்வதோடு கடமையை முடித்துக் கொள்கிறது. கொள்ளை சம்பவங்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக எந்த வித தொடர் விசாரணையும் மேற்கொள்வது கிடையாது. நகைகள், பொருட்களை பறி கொடுத்தவர்கள் காவல் நிலையத்துக்கு நடையாய் நடந்து ஏமாந்து போவது தான் மிச்சமாகி உள்ளது. கொள்ளை சம்பவங்களை தடுக்கவோ,  கொள்ளையர்களை பிடிக்கவோ காவல் நிலையங்களில் உள்ள போலீசார் எந்த வித கவனமும் செலுத்துவதில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள தனிப்படை போலீசார் தான் திருட்டு சம்பவங்களில் விசாரணை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கும் காவல் நிலையங்களில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. இதனால் தனிப்படை போலீசாரும் இப்போது பெரிய அளவில் கொள்ளை சம்பவங்களில் விசாரணை நடத்த ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கொள்ளையர்கள் மிகவும் சுதந்திரமாக உலா வந்து கொண்டு இருக்கிறார்கள்.  போலீசாரின் மந்தமான நடவடிக்கையால் பொதுமக்கள் கதி கலங்கி போய் உள்ளனர். பிற மாவட்டங்களை விட இங்கு திருட்டுகளும், கொள்ளை சம்பவங்களும் குறைவு தான் என புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமே கூறி அனுப்பி வைக்கும் போலீசாரும் இருக்கிறார்கள்.  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துங்கள் என கூறி விட்டு எளிதில் கொள்ளை வழக்கை முடித்து விடுகிறார்கள். கொள்ளை சம்பவங்களில் முன்பு போல் விசாரணை நடத்தக்கூடிய திறன் பெற்ற போலீசார் இல்லை.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர்களை கூட கண்டுபிடிக்க முடியாமல், வீடுகளில், குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துங்கள் என கூறுவது நியாயமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  இதுவரை நடந்த கொள்ளை சம்பவங்களில் எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில் இனி நடக்க போகும் கொள்ளை சம்பவங்களையாவது காவல்துறை தடுக்குமா? என்பதும் சந்தேகம் தான் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

போலீஸ் ரோந்து பணியே இல்லை

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காவல்துறையில் மிக முக்கியமான பணியே ரோந்து பணி தான். காலை மற்றும் மாலை வேளையில் ஷிப்ட் முறையில் ரோந்து பணி நடக்கும். குறிப்பாக அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான நேரத்தில் போலீசார் விழிப்புடன் கண்காணிப்பார்கள். ஆனால் இப்போது ரோந்து பணியே இல்லை. முன்பெல்லாம் இரவு நேர காட்சி முடிந்து வருபவர்களை கூட சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்து செல்வார்கள். அப்படி அழைத்து செல்லப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட காலமும் உண்டு. ஆனால் இப்போது இரவு நேரத்தில் எந்த ரோட்டிலும் போலீசாரை  பார்க்க முடிவதில்லை. பேட்ரோல் ரோந்து வாகனங்கள் முடங்கி கிடக்கின்றன. முக்கிய சாலைகளில் கூட போலீஸ் வாகனத்தை பார்க்க முடியாத நிலையில், சந்து, பொந்துகளில் போலீசாரை எப்படி பார்க்க முடியும். திருட்டை தடுக்க ரோந்து பணிக்கு எஸ்.பி. முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுமக்களுடன் போலீசார் நல்லுறவுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் சில தகவல்களை கொடுப்பார்கள். எஸ்.பி.க்கே நேரடியாக பொதுமக்கள் தகவல் கூறி, கொள்ளையர்களை பிடித்த காலமும் உண்டு. ஆனால் இப்போது பொதுமக்களுடன் போலீசார் நெருங்குவதில்லை. பொதுமக்களும் போலீசாரை நம்பி தகவல்களை கூறுவதில்லை என்றார்.

கொள்ளை சம்பவங்களில் உரிய விசாரணை

கொள்ளை சம்பவங்கள் குறித்து எஸ்.பி. நாத் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பல சம்பவங்களில் துப்பு துலங்கி நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த கொள்ளை சம்பவங்களில் கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். வீடுகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கேமராக்கள் அவசியம் ஆகும். சமீபத்தில் கூட நாகர்கோவில் மாநகர் முழுவதும் 150 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் உரிய முறையில் ரோந்து சென்று வருகிறார்கள் என்றார்.Tags : robbery , Police,crack down, serial robbery
× RELATED நீலாங்கரையில் கொள்ளை முயற்சியை தடுத்த போலீசுக்கு காவல் ஆணையர் பாராட்டு