×

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலை: வருமான வரி சோதனைக்கு பயந்து தூக்கில் தொங்கிய பரிதாபம்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் வீட்டில் சோதனை  நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவரின் உதவியாளர் ரமேஷ் (40)  வீட்டிலும் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள்  என்ற பயத்தில் அவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜாலப்பாவுக்கு சொந்தமான மருத்துவ  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது, அதிகளவில் நன்கொடை வசூலித்து முறைகேடு  செய்துள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த மருத்துவ கல்லூரிகள் உள்பட  கல்வி நிறுவனங்களில் கடந்த 9ம் தேதி முதல் நேற்று அதிகாலை வரை வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் மூலம் நடந்த இந்த சோதனையில், ரூ.5 கோடி வரை ரொக்க பணம், மாணவர்  சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் கொண்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமேஸ்வரின் தீவிர  ஆதரவாளரான ரங்கநாத், அவரின் உதவியாளராக இருந்த ரமேஷ், பரமேஸ்வரின் அண்ணன்  மகன் ஆனந்த் உள்பட பலரின் வீடுகளில் சோதனை நடத்தியதுடன் அவர்களிடம் முதல்  கட்டமாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அழைக்கும் போது விசாரணைக்கு நேரில் வர வேண்டும்  என்று உத்தரவிட்டனர். தனது வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை குறித்து நண்பர்களிடம் ரமேஷ்  கூறியதுடன், அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல  முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார். நேற்று காலை பெங்களூரு உள்ளால்  சாலையில் உள்ள அவரது வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்ட பின் பரமேஸ்வர்  வீட்டிற்கு செல்வதாக கூறி காரில் சென்றார்.
இந்நிலையில், நேற்று  பகல் பெங்களூரு பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில்  தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தனது இரு நண்பர்களுடன்  செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ள ரமேஷ், நான் பல்கலைக் கழக வளாகத்தில்  இருப்பதாக கூறிவிட்டு, செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.

இதில்  பதற்றமடைந்த நண்பர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது மரத்தில் அவர் தூக்கில்  தொங்கி கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் ேபாலீசாருக்கு தகவல் அளித்தனர். ரமேஷ்  தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து பார்த்தபோது, அவர்  கையால் எழுதி இருந்த கடிதத்தை பறிமுதல் செய்தனர். அதில், வருமான வரித்துறையின் சோதனையால் அச்சமடைந்து தற்கொலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். ராம்நகரம்  தாலுகா, மேளேஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், தீவிர காங்கிரஸ் தொண்டராக  இருந்தார். பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு  மேலாக வேலை செய்து வந்த அவர், கடந்த 2010ம் ஆண்டு முதல் பரமேஸ்வரின்  உதவியாளராக இருந்தார். கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது,  தும்கூரு மாவட்டம், கொரட்டிகெரேவில் பரமேஸ்வருடன் இருந்தார்.

அவர் தற்கொலை  செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் சகோதரிகள் லட்சுமிதேவி, பத்மா, மனைவி  சவுமியா உள்பட உறவினர்கள் ஞானபாரதி வளாகம் வந்தனர். அவர்களை சடலத்தின் அருகில் விடாமல் போலீசார் தடுத்து விட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த  உறவினர்கள், ரமேஷ் சாவுக்கு வருமான வரித்துறை தான் காரணம் என்று குற்றம்  சாட்டினர். இது தொடர்பாக ஞானபாரதி போலீசாரிடம் லட்சுமிதேவி புகாரும்  கொடுத்தார். ரமேஷ் தற்கொலை தகவல் கிடைத்ததும் மாநில காங்கிரஸ் தலைவர்  தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சர் உமா உள்பட பலர் நேரில் வந்து  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். ரமேஷின் ஆதரவாளர்கள் வருமான வரி அதிகாரிகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் ஞானபாரதி பகுதியில் பதற்றம்  ஏற்பட்டது.

‘மானம், மரியாதைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’
ரமேஷ் தனது தற்கொலை கடிதத்தில், ‘அனைவருக்கும்  வணக்கம், எனது வீட்டில் நடந்த ஐடி சோதனையால் நான் மிகவும்  அச்சமடைந்துள்ளேன். மானம், மரியாதைக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்கிறேன்.  ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும் என்ற கலாசாரத்தால் நான் மிகவும்  விரக்தியில் இருந்தேன்.  ஐடி அதிகாரிகளே, எனது மனைவி, பிள்ளைகளுக்கு தொல்லை தர வேண்டாம்’ என்று எழுதியுள்ளார்.

Tags : aide ,Parameswaran ,deputy chief minister ,Karnataka ,Parameswara ,suicide , Former Deputy Chief Minister of Karnataka, Parameswar, assisted suicide
× RELATED அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்!