×

விஜய் ஹசாரே டிராபி தமிழகம் 8வது வெற்றி

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவில், தமிழக அணி தொடர்ச்சியாக 8வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம் - மத்தியப் பிரதேசம் மோதின. டாசில் வென்ற மத்தியப் பிரதேசம் முதலில் பந்துவீச, தமிழகம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்தது. முகுந்த் 147 ரன் (139 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்), எம்.விஜய் 24, அபராஜித் 6, விஜய் ஷங்கர் 90 ரன் (93 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் கார்த்திக் 65 ரன் (28 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய ம.பி. அணி 28.4 ஓவரிலேயே 149 ரன்னுக்கு சுருண்டது. ஆனந்த் பைஸ் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். துபே 28, வெங்கடேஷ் 25, கேப்டன் ஓஜா 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தமிழக பந்துவீச்சில் எம்.அஷ்வின் 3, அபராஜித், சாய் கிஷோர், தன்வார் தலா 2, விஜய் ஷங்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். தமிழகம் 211 ரன் வித்தியாசத்தில் 8வது வெற்றியை பதிவு செய்து சி பிரிவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

Tags : Vijay Hazare Trophy, Tamil Nadu
× RELATED விஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்