×

இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது பிரச்னைகள் விவேகத்துடன் தீர்க்கப்படும்:பிரதமர் மோடி நம்பிக்கை

சென்னை: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இரு நாட்டு பிரச்னைகள் விவேகத்துடன் தீர்க்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் தமிழகம் வந்திருக்கும் சீன அதிபர் ஜின்பிங் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைகளை பார்வையிட்டார். அவரிடம் சிற்பக் கலைகளின் பெருமையை பிரதமர் மோடி விளக்கி கூறினார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சிகளை சீன அதிபரும், பிரதமர் மோடியும் கண்டுகளித்தனர்.தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் நடந்தது. கடற்கரை காற்றை சுவாசித்தபடி இரு நாட்டு தலைவர்களும் உரையாடினர். பின்னர் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அப்போது, நமது நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே உள்ளிட்ட 8 அதிகாரிகளும், சீனா சார்பில் 8 அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியில் உங்களை வரவேற்க விரும்புகிறேன். மதிப்பிற்குரிய விருந்தினர்களை தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் (இந்த வார்த்தைகளை தமிழில் பேசினார்). இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தகம் மற்றும் கலாசார உறவு உள்ளது. இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியுள்ள நாடுகளாக உள்ளன. கடந்த ஆண்டுகளில் நமது முறைசாரா சந்திப்புகள் நடந்து இந்திய-சீன உறவுகள் வலுப்பெற்றிருந்தது.

இருந்தபோதும் ‘‘சென்னை விஷன்’’ என்ற இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் உள்ள பிரச்னைகள் விவேகத்துடன் தீர்க்கப்படும். இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சந்திப்பின் மூலம் உலக அமைதிக்கு வழி ஏற்படும். சென்னையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்புக்கும் உறவுக்கும் இந்த சந்திப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே எந்த பிரச்னைகளையும் ஏற்பட விடமாட்டோம். இரு நாடுகளுக்கும் இடையே புதிய நிலையான தன்மை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வழக்கமான உடைக்கு மாறிய மோடி
சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்தித்து பேச பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் கோவளம் சென்றார். நேற்று முன்தினம் மாலை சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் முறைப்படி வரவேற்றார். அப்போது, தமிழர்களின் பாரம்பரியமான உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி அசத்தினார். இது அனைவரையும் கவர்ந்தது. நேற்று 2வது நாள் சீன அதிபருடன் கோவளம் கடற்கரை அருகே ஓட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரதமர் மோடி வழக்கமாக அணியும் உடையான, குர்தா அணிந்து, அதற்கு மேல் ஓவர்கோட் போட்டிருந்தார். சீன அதிபரும், வழக்கமான கோட், சூட் அணிந்திருந்தார்.

சீன அதிபர் நேபாளம் சென்றார்
சீனா அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியாவில் தனது 2 நாட்கள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு கோவளத்திலிருந்து காரில் நேற்று பகல் 1.29 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமானநிலையத்தில் சீனா அதிபரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் வழியனுப்பி வைத்தனர். பின்பு சீனா அதிபர் ஜீ ஜின்பிங் 1.38 மணிக்கு தனி விமானத்தில் நேபாளம் புறப்பட்டுச் சென்றார்.

டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பதற்காக தமிழகம் வந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு நரேந்திரமோடி, நேற்று மதியம் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  
பிரதமர் நரேந்திரமோடி கோவளத்திலிருந்து ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.32 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சபாநாயகர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் பிரதமரை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவைத்தனர். பிரதமர் தனி
விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஜின்பிங் உருவம் பொறித்த பட்டாடை பரிசளித்த மோடி
தமிழகம் வந்த சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி நேற்று 2வது நாளாக கோவளத்தில் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மதியம் 12.20 மணிக்கு முடிவடைந்ததும், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் ஓட்டலின் ஒரு அரங்கில் வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் பிரபலமான கைத்தறி பட்டு, கைத்தறி ஆடை மற்றும் புத்தர், நடராஜர், கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகளை பார்வையிட்டனர். சீன அதிபருக்கு கைத்தறி மூலம் பட்டு ஆடைகளை நெசவு செய்வதையும் விளக்கி கூறினார்.

சீன அதிபர் அதை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். இதையடுத்து சீன அதிபர் ஜின்பிங் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு சால்வை ஒன்றை பிரதமர் மோடி சீன அதிபருக்கு பரிசாக அளித்தார். அடுத்து பிங்கான் தட்டு வகைகளை பார்வையிட்டனர். அதில் மோடி படம் பொறித்த பீங்கான் தட்டு ஒன்றை பிரதமர் மோடி சீன அதிபருக்கு பரிசளித்தார். அதேபோன்று, புத்தர், நடராஜர், அழகிய வேலைபாடுடன் கூடிய குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அழகிய வடிவத்தில் ஆக சிலைகளையும் பிரதமர் மோடி சீன அதிபருக்கு காண்பித்து விளக்கம் அளித்தார். பெண்கள் பூ, மாலை சுற்றுவதையும் சீன அதிபருக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது.

Tags : Talks ,countries ,Modi , Modi, Prime Minister of both countries
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...