×

நரேந்திர மோடி, ஜின்பிங் சந்திப்பின்போது தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்பட முடிவு: வெளியுறவு துறை செயலாளர் தகவல்

சென்னை: தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய பிரதமரும், சீன அதிபரும் முடிவெடுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:  பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் 2வது முறைசாரா சந்திப்பு 2 நாட்கள் நடந்தது. இரு தலைவர்களும் நண்பர்களைப்போல் சர்வதேச மற்றும் உள்நாட்டு முக்கியத்துவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்கள்.  சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், பொருளாதார நிலை மாற்றம் போன்ற சவால்களை எப்படி எதிர்கொண்டு இலக்கை எட்டுவது போன்ற விஷயங்களுக்கு இரு நாட்டு தலைவர்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் பொதுவான பிரச்னையாக தீவிரவாதம் என்பதை கருத்தில் கொண்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, நிதி உதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் தீவிரவாத குழுக்களை ஒழிக்க சர்வதேச அளவில் ஒரு திட்டத்தை உருவாக்கவும், தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய்துள்ளனர். இருதரப்புக்கும் நன்மை தரும், சமநிலையான பொருளாதார பங்களிப்புக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும் ஆலோசித்தார்கள்.
தமிழ்நாட்டுக்கும் சீன புஜியான் மாகாணத்திற்கும் இடையில் ஒரு நல்ல உறவை உருவாக்கி மகாபலிபுரம் மற்றும் புஜியான் மாகாணத்திற்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்தவும் அதற்காக ஒரு அகாடமியை ஏற்படுத்தவும் இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். சீனாவின் 70ம் ஆண்டு கொண்டாட்டம் நடக்கவுள்ள “2020ஐ இந்திய-சீன கலாசாரம் மற்றும் இருநாட்டு மக்களும் பரிமாற்றம் ஆண்டாக’’ அறிவிப்பது என்று இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

 இந்திய-சீன உறவு ஆண்டான 2020 இருதரப்புக்கும் இடையேயான அனைத்து மட்டங்களிலும் அதாவது சட்டம், அரசியல் கட்சிகள், கலாசாரம், இளைஞர் அமைப்புகள், ராணுவம் ஆகியவற்றில் பரிமாற்றங்களை செய்வது என்றும் முடிவெடுத்துள்ளனர். சீனாவின் 70ம் ஆண்டு விழாவையொட்டி இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 70 விதமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்பை மீண்டும் தெரிந்துகொள்ளும் வகையில் கப்பலில் மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  உற்பத்தி துறையில் ஒப்பந்தங்களை செய்வதற்காக உயர் மட்ட பொருளாதார வணிக பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருநாட்டு எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம் பரிமாரிக்கொண்டார்கள்.

சீனாவில் நடைபெறவுள்ள 3வது முறைசாரா சந்திப்பில் கலந்துகொள்ள பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் அழைத்தார். அதை பிரதமரும் ஏற்றுக்கொண்டார். இரு நாட்டு தலைவர்களும் 6 மணிநேரம் பேசினார்கள். இரு நாடுகளிலும் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தவும், கைலாஷ்-மானசரோவர் சுற்றுலா தலத்திற்கு இந்தியர்கள் எளிதாக செல்ல வழிவகுப்பது குறித்தும் பேசப்பட்டது. தீவிரவாதம் முக்கிய பிரச்னையாக பேசப்பட்டது. காஷ்மீர் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. இருநாட்டு உற்பத்தி வாணிபம் குறித்து பேச நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் சீன துணை துணைஅதிபர் அடங்கிய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சீன தூதரகம் அமைப்பது குறித்து விவாதிக்கவில்லை.

Tags : Narendra Modi ,Jinping ,Secretary of State , Narendra Modi, Jinping, Foreign Secretary
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...