×

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தொழிற்சாலைகளுக்கு 3 லட்சம் அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: பூந்தமல்லியில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 2 கார்   தொழிற்சாலைகளுக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து, பூந்தமல்லி நகராட்சி ஆணையர் டிட்டோ கூறியதாவது: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் டெங்கு கொசு புழு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கரையான்சாவடி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.  அனைத்து பகுதிகளிலும்  கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் டெங்கு குறித்த அறிகுறி, பாதிப்பு, தடுக்கும் நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

டெங்கு விழிப்புணர்வை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி, பேனர், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று பூந்தமல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையில் டெங்கு கொசு புழு இருப்பது கண்டறியப்பட்டதால், அந்த தொழிற்சாலைக்கு ₹2 லட்சமும், இதேபோல், மற்றொரு கார் தொழிற்சாலையிலும் டெங்கு கொசு புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டதால் ₹1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. கொசு புழு உருவாவதற்குரிய சூழ்நிலையில் இருந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது.
டெங்கு கொசு ஒழிப்பில் நகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொசு புழு உற்பத்திக்கு காரணமாக யார் இருந்தாலும் பாரபட்சமில்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Factories , Dengue mosquito, factory, fine
× RELATED பட்டாசு ஆலைகளில் எச்சரிக்கை தேவை: ஜி.கே.வாசன் அறிக்கை