இந்திய ரயில்வேயில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மாதாந்திர மருத்துவ அலவன்ஸ் நிறுத்தமா? : அதிர்ச்சியில் தொழிற்சங்கங்கள்

வேலூர்: ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கான மாதாந்திர மருத்துவ அலவன்ஸ் தொகை நிறுத்தப்பட உள்ளதாக வெளியாகி உள்ள செய்தியால் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசின் ரயில்வே துறையில் 14 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இதில் 7.5 லட்சம் பேர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் மாதாந்திர பென்ஷன் பெற்று வருகின்றனர்.

ரயில்வேயில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஊழியர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்கும் வகையில் ரயில்வே சார்பில் 100க்கும் மேற்பட்ட கோட்ட அளவிலான மருத்துவமனைகள் மற்றும் 530க்கும் மேற்பட்ட தலைமை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு புகைப்படைத்துடன் கூடிய மருத்துவ அடையாள அட்டை புத்தக வடிவில் வழங்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவ அடையாள அட்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இனிடையே அதிக பயன்பாடு காரணமாக காகித வடிவம் கொண்ட மருத்துவ அடையாள அட்டை அடிக்கடி கிழிந்து சேதமானது. இதனால் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களை மருத்துவ சீட்டில் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதில், ரயில்வே ஊழியர்களுக்கு தனி நிறத்திலும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு வேறு நிறத்திலும் தேசிய அளவிலான ரகசிய குறியீட்டு எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஒவ்வொரு மருத்துவ அடையாள அட்டைக்கும் தனித்தனி குறியீட்டு எண்கள் கொண்ட அடையாள அட்டைகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ரயில்வே நிர்வாகம் பெற்றுக்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கான மருத்துவ அலவன்ஸ் நிறுத்தப்படலாம் என்று வெளியான செய்தியால் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ‘ஓய்வுபெறும் காலத்தில் கடைசி மாத சம்பளத்தை  ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக முழுமையாக  வழங்கினோம். இதன் மூலமாக ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மனைவி மற்றும் திருமணம் ஆகாத மகள் ஆகியோருக்கு மருத்துவ சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டிருந்தது. ரயில்வே சார்பில் ஒவ்வொரு மாதமும் 1000 மருத்துவ அலவன்ஸ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

இதைத்தவிர்த்து கோட்ட அளவிலான ரயில்வே மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை, மருந்து மாத்திரைகள் ஆகியவை வழங்கபட்டு வந்தது. இந்நிலையில், ரயில்வே நஷ்டத்தில் இயங்குவதால், ரயில்வே மருத்துவமனைகள் மூடப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் தங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான மருத்துவ செலவினங்களை ரயில்வே நிர்வாகம் நேரடியாக செலுத்தி விடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக ஒவ்வொரு ரயில்வே ஊழியர் மற்றும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு தனித்தனியாக தேசிய அளவிலான குறியீட்டு எண்கள் கொண்ட மருத்துவ அடையாள அட்டைகள் இன்னும் 6 மாதங்களில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர மருத்துவ அலவன்ஸ் தொகை 1,000 நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஎன்று ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்ததில், ‘ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மாதாந்திர மருத்துவ அலவன்ஸ் தொகையான 1,000 ரத்து செய்யப்படுமா என்பது தெரியவில்லை. 6 மாதங்களுக்கு பின்னர்தான் உண்மைநிலை தெரிய வரும் என்றனர்.

Related Stories:

>