×

நூற்பு ஆலைகளில் 10க்கு 10 அறையில் தங்கி வேலை குழந்தை தொழிலாளர்களாக மாறும் வெளிமாநிலத்தவர்களின் குழந்தைகள்

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் குழந்தைகளின் படிப்பறிவு புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவில், சுமார் 70 நூற்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் உள்ளூர் தொழிலாளர்களை விட ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த வெளி மாநில தொழிலாளர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் மூலம் அழைத்துவரப்பட்ட இந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 500 சம்பளம் பேசி அழைத்துவரபட்ட போதிலும், தொழிற்சாலைகளில் ஒரு சிப்டுக்கு 250 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. சொந்த மாநிலத்தில் தினம் 125 க்கு வேலை செய்து பழக்கப்பட்ட இந்த தொழிலாளர்கள், இங்கு வழங்கப்படும் 250 அதிகமாக இருப்பதால் இங்கேயே தங்கிவிடுகின்றனர். இவர்கள் தங்கிக்கொள்ள ஆலையின் வளாகத்தில் சிறிய அறைகள் அமைத்துக்கொடுத்துள்ளனர். பொதுவான கழிப்பறைகளை பயன்படுத்திக்கொள்ளும் வெளிமாநில தொழிலாளர்கள், பத்துக்குபத்து அறையில் 10 பேர் வரை தங்க நேர்ந்தாலும் அனுசரித்து போகின்றனர். ரேசன் அரிசி, கோதுமை போன்றவற்றை கிலோ ₹5க்கு வாங்கி உணவுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இந்த சிக்கன வாழ்க்கைக்கு உள்ளூர் தமிழ்பேசும் தொழிலாளர்கள் உடன்படுவதில்லை. இதனால் ஆலை அதிபர்கள் வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதையே அதிகமாக விரும்புகின்றனர். ஆலையின் குடியிருப்பில் தங்கியுள்ள பல தொழிலாளர்கள், மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்துடன் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் குழந்தைகள் அறையிலேயே தங்கியுள்ளனர். பள்ளி செல்லும் வயதில் உள்ள இந்த குழந்தைகளுக்கு படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்தி பேசும் இந்த குழந்தைகளுக்கு, இங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்து, தமிழ் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கான  வாய்ப்புகளும் இல்லை. குடும்ப வறுமை போக்க வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அறிவுபெறும் வாய்ப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு தேவையான எழுத்தறிவினை வழங்கும் பொறுப்பு ஆலை நிர்வாகத்திற்கு இருந்த போதிலும், அக்கரை காட்டப்படுவதில்லை. இதனால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

படிப்பதற்கு வாய்ப்பில்லாத வெளிமாநில குழந்தைகள், ஆலையின் உள்ளேயே குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை மேலோட்டமாக ஆய்வை முடித்து, பூசி மெழுகி விடுகின்றனர். தொழிலாளர்களின் அறையில் குறுகிய இடத்தை பலரும் பகிர்ந்து கொள்வதால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுக்கு ஆலையில் இஎஸ்ஐ உள்ளிட்ட முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்காததால், தொழிலாளர்கள் பலரும் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மைனர் பெண்களை காதல் வார்த்தை கூறி அழைத்து வரும் வெளி மாநிலத்தவர்கள், இங்குள்ள ஆலைகளில் பதுங்கிக் கொள்கின்றனர். ஆனாலும் பல பெற்றோர் போலீசில் புகார் செய்து பெண் குழந்தைகளை மீட்டுச்செல்வது இங்கு சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சொந்த ஊரில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலரும் இங்கு வந்து தொழிலாளர்கள் போர்வையில் பதுங்கிக்கொள்கின்றனர்.

இவர்களை பற்றிய எந்த விதமான பதிவுகளும் உள்ளூர் காவல் நிலையத்திலோ, தொழிலாளர் நல அலுவலகத்திலோ பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் கடுமையான குற்றங்களை செய்தவர்களும் இங்குள்ள ஆலைகளில் பாதுகாப்பாக தங்கி இருக்கவும் வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்கள் முன்பு சங்ககிரி அருகே மெதுவாக சென்ற ரயிலில் கொள்ளையடித்த வெளிமாநில தொழிலாளர்களின் துணிகரச்செயல், இது போன்ற சந்தேகங்களை வலுவடையச் செய்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்காக செல்லும் தொழிலாளர்களை, அங்குள்ள தொழிலாளர் நல அலுவலகம் மூலம் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க உள்ளூர் காவல் நிலையத்தில் அவர்களை முறைப்படி ஆலை நிர்வாகம் பதிவு செய்திட வேண்டும். ஆலையை விட்டு வெளியேறினால், அது குறித்து காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்களின் நடமாட்டத்தை முறைப்படி கண்காணிக்காவிட்டால் இனி வரும் காலங்களில் குற்றங்களை தடுக்க முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இங்குள்ள நூற்பு ஆலைகளில் முறைப்படியாக ஆய்வினை மேற்கொண்டும், தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொழிற்சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags : outsiders ,Children ,child laborers ,room ,spinning plant , Children, outsiders ,spinning plant ,child labor
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...