×

டெங்கு, வைரல் காய்ச்சலை தொடர்ந்து சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ்-ஐ’ : பாதுகாப்பாக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்

சென்னை நகரில், டெங்கு காய்ச்சலைப்போல, கண் நோய்(மெட்ராஸ்-ஐ) வேகமாக பரவி, கண்கள் பிங்க் (இளஞ்சிவப்பு) நிறத்தில் மாறி வருகிறது. இதில் இருந்து தப்பிக்க தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.  பருவமழைக்காலம் வந்தாலே தொற்று நோய்களும், காய்ச்சல்களும் பரவுவது வாடிக்கையாகி வருகிறது. மழைக்காலங்களில் ஏடிஎஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் டெங்கு, மலேரியா, வைரல் காய்ச்சல்கள் உட்பட பல்வேறு நோய்களால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். காய்ச்சல் அறிகுறிகள் காரணமாக நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதில் டெங்கு பாதிப்பு மற்றும் வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சலுக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் 20 முதல் 40 வரையிலான கூடுதல் படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகளும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக செவிலியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறையே தெரிவித்துள்ளது. இந்தநிலையில், டெங்கு மற்றும் வைரல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களால் சென்னை மக்கள் அவதி அடைந்து வரும் நேரத்தில் தற்போது புதியதாக சென்னை மக்களை ‘மெட்ராஸ்-ஐ’ என்ற கண் நோய் தாக்கி வருகிறது. இளஞ்சிவப்பு கண் நோய் அல்லது கண் அழற்சி அல்லது சென்னை மக்கள் இதை ‘மெட்ராஸ்-ஐ’ என்றே சொல்கின்றனர். இந்த கண் நோயானது சென்னை மக்களை மார்கழி மாதம் தான் அதிகமாக தாக்கும். ஆனால், தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இந்த கண் நோயின் தாக்கம் சென்னையில் தொடங்கிவிட்டது. மெட்ராஸ்-ஜ நோய் எண்பது கண்ணின் வெண்படலத்தில் ஏற்படும் வீக்கம். இது விரைவாக பரவக்கூடிய வகையில் உள்ள ஒருவகை நோய் தொற்று. இது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை எளிதில் தாக்குகிறது. தொற்று பாதிப்புள்ள நபர்களுக்கு கண்ணில் அரிப்பு உணர்வும், எரிச்சல் உணர்வும், நீர்வடிதலும் ஏற்படும்.

வெளிச்சத்தை பார்த்தால் கண் கூசும். இதனால் கண்ணின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் பிங் (இளஞ்சிவப்பு) நிறத்தில் மாறிவிடுகிறது. இந்த கண் நோய் வந்தால் உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது டெங்கு காய்ச்சலை போன்ற இந்த கண் நோய்க்கு சிகிச்சை பெற நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு சென்றவாறு உள்ளனர். இந்த கண் நோய் குறித்து கண் மருத்துவர்கள் கூறியதாவது:  சென்னையில் அடினோ வைரஸ் பரவி வருகிறது. இது ஒரு விதமான கண் நோய். இதனால் கண்கள் சிவப்பு நிறமாக மாறி தோற்றமளிக்கிறது. கண் எரிச்சல், நீர் வடிதல், அழுக்கு தேங்குதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த வைரஸ் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என நம்முடன் இருப்பவர்களிடம் இருந்து எளிதில் பரவி விடுகிறது. இதற்கு மருந்து கொடுத்தாலும் கட்டுபடுத்துவது சிரமாக உள்ளது. எனவே மக்கள் கண்களை சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

வீட்டிலும், வெளிப்புறங்களிலும் சுத்தமான துண்டுகளை பயன்படுத்த வேண்டும், மற்றவர் பயன்படுத்திய துண்டுகளையோ அல்லது ஆடைகளையோ உபயோகிக்க கூடாது. தினதோறும் படுக்கை துணிகளை மாற்றிவிட வேண்டும், கண் அலங்கார பொருட்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொள்ளாமல் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஏற்கனவே பயன்படுத்திய கண் அலங்கார பொருட்களை தூக்கி வீசி விடுவது நல்லது.இவ்வாறு கூறினர்.

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு அடிக்கடி உங்களின் கைகளை சுத்தம் செய்வது இந்த கண் நோய் பரவாமல் தடுக்க உதவும். தனிப்பட்ட டவல், கைக்குட்டை, தலையணை உறை, படுக்கை விரிப்பு மற்றும் சோப்புகளை பயன்படுத்த வேண்டும். கண்கணில் கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்ப்பது நல்லது. குளிர் கண்ணாடிகளை அணியலாம். கண்களை தொடவோ அல்லது தேய்க்கவோ கூடாது. கண் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே கண் சொட்டு மருத்தை உபயோகிக்க வேண்டும். கண்களுக்கு பயன்படுத்தும் மேக்-அப், சாதனங்கள், கான்டக்ட் லென்ஸ்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தனிநபர்களின் ஆடைகளோடு சேர்ந்து உங்களது ஆடைகளை துவைக்கக்கூடாது. படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வெந்நீர் மற்றும் சோப்பை பயன்படுத்தி துவைக்க வேண்டும். அடிக்கடி கண்ணை தூய நீரை கொண்டு கழுவ வேண்டும். கைகளில் எப்போதும் டவல் அல்லது கைக்குட்டை வைத்திருக்க வேண்டும்.

கண் நோய் தவிர்க்க..

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட ஒளிரும் திரைகளை பார்க்காமல் இருக்க வேண்டும். கண்களில் தூசி படாமல் பார்த்துகொள்ள வேண்டும். இந்த கண்நோய் வந்தால் அதிகபட்சமாக 5 நாட்களில் சரியாகிவிடும். ஆனால், இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து கண் எரிச்சல் அல்லது கண் வலி இருந்தால் மருத்துவரை உடனடியாக சென்று பார்க்க வேண்டும். இந்த கண் நோய் என்பது ஒருவருடைய கண்ணை நேரடியாக பார்த்தால் பரவும் என்பது தவறு. மாறாக நோய் பாதிப்பு உள்ளானவரை தொட்டுவிட்டு தங்களுடைய கண்களில் கைவைக்கும் போது மட்டுமே இந்த கண் நோய் பரவும்.

Tags : Madras , Dengue, viral fever spread ,fast in Chennai
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு