×

கீழடி... மீண்டெழும் வைகை நதி நாகரிகம்

மதுரையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூரை உலகம் முழுவதும் உள்ள வரலாற்று அறிஞர்கள், தொல்லியலாளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ஊரின் பெயர் ‘கீழடி’. தமிழகம் மட்டுமின்றி வடமாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமான மக்கள் அன்றாடம் கீழடியில் குவிந்து வருகின்றனர். அப்படியென்ன அங்கிருக்கிறது?

தமிழகத்தில் இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சிகளில் முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள் தான் கிடைத்துள்ளன. ஆனால், கீழடியில் தான் ஒரு நகர நாகரீகம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆதாரங்களாய் கிடைத்துள்ளன. மதுரை, வைகை நதியின் தென்கரையில் திருப்புவனத்தில் உள்ள கீழடியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நாகரீகம் சிறப்புற விளங்கியதற்கான சான்றுகள் தோண்ட, தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இலக்கிய ‘மணிகள்’: குறிப்பாக, சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் 600க்கும் மேற்பட்டவை கீழடியில் கிடைத்துள்ளன. ஆடையிலும் அழகு... அழகிய ஆபரணங்கள் மட்டுமின்றி இங்கு கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் நூல் நூற்கும் தக்ளி. அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை கீழடி உறுதி செய்துள்ளது. மேலும் பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன.

ஹரப்பா, மொகஞ்சதாரேவில் படித்த சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள் கீழடியில் கேணிகள் அருகே அமைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதிகளவில் செங்கல் வீடுகளும், அந்த வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது. அத்துடன் வீடுகள்தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.
வணிக நகரம்: இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மண்கல ஓடுகள் கிடைத்துள்ளன. பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக வழிப்பாதை இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக சில பொருட்கள் கிடைத்துள்ளன. அழகன்குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயர்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போலவே, கீழடியிலும் கிடைத்துள்ளன. அந்த வகையில் அழகன்குளம் துறைமுகப்பட்டினத்தையும், மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், காஞ்சிபுரம் மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் கிடைத்ததைவிட கீழடியில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் கட்டிடங்கள் இல்லை என்ற கூற்றை கீழடி அகழாய்வு மாற்றி அமைத்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் திருப்பெரும்குன்றத்தில் இருந்து நேர் கிழக்காக உள்ள மதுரை உள்ளது என்று குறிப்பிடுகிறது. அது கீழடியைத்தான் குறிக்கிறது என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். வைகை நதி நாகரீகம்: அந்த கால மக்கள் பயன்படுத்திய முத்திரை கட்டைகள், எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது கீழடியில் மட்டும் தான். நைல் நதி நாகரீகம் போல வைகை நதி நாகரீகம் தழைத்தோங்கிய கீழடி, வணிகப்பெருநகரம் என்ற அடையாளத்தை மண்ணுக்குள் மறைத்துக் கொண்டு காட்சி தருகிறது.

எப்போது துவங்கியது: கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், பழந்தமிழர் நாகரீகத்தை புதைத்து வைத்துள்ளது. கீழடியில் 1974ம் ஆண்டு உழவிற்காக தோண்டப்பட்ட போது கிணற்றில் கிடைத்த செங்கல் தான் அங்கு ஒரு நகரம் புதைந்து கிடக்கிறது என்ற உண்மையை வெளி உலகிற்குச் சொன்னது. கீழடி பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது மாணவர்களுடன் சென்று செங்கல் கிடைத்த கிணற்றைப் பார்த்தபோது அவருக்கு ஆச்சரியம். மண்பொம்மை, கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட மண் குவளை, மண்டை ஓடுகள், எலும்புகள், நாணயங்கள், தாழிகள் கிடைத்தன. அப்படி கிடைத்த பொருட்கள் குறித்து அன்றைய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை ஆசிரியர் அனுப்புகிறார். பதில் இல்லை. அடுத்த ஆண்டு கிடைத்த பொருட்கள் பள்ளியில் பாதுகாக்கப்படுகின்றன. இதையடுத்து 1976ம் ஆண்டு அப்போதைய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமியை சந்தித்து தகவலை ஆசிரியர் தெரிவிக்கிறார். இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர் ச.வேதாசலம் பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் வைத்ததுடன் வெளிநாடுகளுக்கும் ஆய்விற்கு அனுப்பி வைக்கிறார்.

இதன் பின் கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து 2013ம் ஆண்டு பண்டைய பொருட்கள் கிடைத்த அந்த கிணற்றை அதன் உரிமையாளர் அனுமதியோடு, தொல்லியல் ஆய்வாளர்கள் ச.வேதாசலம், அமர்நாத் மற்றும் ராஜேஷ் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் கீழடி தொல்லியல் துறை ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டது வரலாறு. கீழடியில் 2015, ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு முதல்கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த பொருட்கள் சங்க கால மதுரை கீழடியில் புதைந்து கிடப்பது அறியப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மேம்பட்ட சிந்தனையுடன் வாழ்ந்துள்ளார்கள் என்ற வரலாறு பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தது. இந்த நிலையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாறுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மிகப்பெரிய ஆய்வு

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால், தமிழ்நாட்டில் நடத்தப்படும் பெரிய அளவிலான அகழாய்வு கீழடி தான். இதைப் பார்க்க தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள், உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்களும், தொல்லியலாளர்களும் குவிந்து வருகின்றனர்.

பொருட்கள் மூலம் அறியப்பட்ட காலம்

அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை நிர்ணயம் செய்ய ஆய்வுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கீழடியில் இருந்து ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரி பொருட்களின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நான்காவது அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மாதிரியை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த ஆய்வு எங்கே?

ஆய்வு குறித்து மாநில தொல்லியல் துறையின் செயலாளர் த.உதயச்சந்திரன் கூறுகையில், ``அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருக்கிறோம். ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருக்கிறோம். இதில் கொந்தகை ஆதிகால மனிதர்களைப் புதைக்கும் நிலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைக்கும் எலும்புகளின் மரபணுவை ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடனும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலுடனும் இணைந்து செயல்படவிருக்கிறோம்’’ என்று கூறினார்.

Tags : Vaigai River Civilization Keezhadi Vaigai River Civilization , Keezhadi, Vaigai River Civilization
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...