×

ஓய்வு பெறும் 1 ஆண்டுக்கு முன்பு பதிவுப் பணியில் இருந்து 15 பேரை மாற்றம் செய்யாத பதிவுத்துறை ஐஜி

* முறைகேடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சர்ச்சை
* மேலிடத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதா?

சென்னை: ஓய்வு பெறும் 1 ஆண்டுக்கு முன்பு சார்பதிவாளர்களை பதிவுப்பணியில் இருந்து நிர்வாக பணிக்கு பதிவுத்துறை ஐஜி மாற்றம் செய்யவில்லை. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் சார்பதிவாளர்களின் முக்கிய பணி வீடு,விளை நிலம் உள்ளிட்ட சொத்துக்களை பதிவு செய்வதுதான். ஆனால் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக நிர்வாக பணிகளுக்கு மாற்றப்படுவது வழக்கம். காரணம் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு எடுக்கும் முடிவால் அரசுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சார்பதிவாளர்களின் ஓய்வுக்கு முன்பாக அவர்களின் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள், துறை ரீதியிலான நடவடிக்கை ஏதும் உள்ளதா என்பது ஆராயப்படும். குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பும், இழப்பீட்டை பெறவும் முடியும். ஆனால், அதை செய்ய தவறியதால் தான் தற்போது 100க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் ஓய்வு பெற்ற பிறகும் விசாரணை நிலுவையில் இருப்பதால், பணப்பயன்கள் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் கடந்தாண்டு பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் சார்பதிவாளர்கள் ஓய்வு பெறுவதற்கு 1 ஆண்டுக்கு முன்பு நிர்வாக பணிக்கு மாற்ற வேண்டும் என்று அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் டிஐஜிக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கு தனியாக கடிதம் எழுதப்படுகிறது. இதைதொடர்ந்து சார்பதிவாளர் உடனடியாக தன்னை பதிவுப்பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆனால், சார்பதிவாளர்கள் சிலர் மேலிடத்திற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, தொடர்ந்து பதிவுப்பணியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் 1 சார்பதிவாளர் வீதம் தமிழகம் முழுவதும் 15 சார்பதிவாளர்கள் வரை ஓய்வு பெறவுள்ள நிலையில் தொடர்ந்து பதிவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் மீது இழப்பு ஏற்படுத்திய விவகாரம், போலி ஆவண பதிவு உள்ளிட்ட புகாரின் பேரில் 17பி பிரிவின் நடவடிக்கை நிலுவையில் இருப்பது மட்டுமின்றி, காவல் நிலையங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. ஆனாலும், அவர்கள் நிர்வாகப்பணிக்கு மாற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.  பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாவுக்கு தகவல் தெரியாத நிலையில் உயர் அதிகாரிகள் அதை மறைப்பதாக கூறப்படுகிறது. இது, பதிவுத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : IG ,retirement , Registered IG, not transfer, 15 people ,registered job ,1 year,retirement
× RELATED வீடுகளில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை, அதிரடி சோதனை